மதுரை, பிப்.10: தை பூசத் திருவிழாவையொட்டி கரூர் அருகே சேவல் சண்டையை நிபந்தனைகளுக்கு உள்பட்டு நடத்திட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.
இதுதொடர்பாக கரூர் மாவட்டம், மூர்த்திபாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி தாக்கல் செய்த மனு:
தை பூசத் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் எங்கள் கிராமத்தில் சேவல் சண்டை நடத்தப்பட்டுவந்தது. கடந்த 7 ஆண்டுகளாக சேவல் சண்டை நடத்தப்படவில்லை. இதனால் கிராமத்தில் வறட்சி ஏற்பட்டு விவசாயமும் நடைபெறவில்லை. இந்த ஆண்டு சேவல் சண்டையை நடத்துவதாக கிராம மக்கள் வேண்டுதல் வைத்தனர். இதைத்தொடர்ந்து நல்ல மழைபெய்து விவசாயம் செழித்துள்ளது.
சேவல் சண்டைக்கு மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரிடம் அனுமதி கேட்டும் அனுமதி அளிக்கவில்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு சேவல் சண்டைக்கு அனுமதி அளிக்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் ஆகியோரடங்கிய டிவிஷன் பெஞ்ச், சண்டையின்போது சேவல் கால்களில் கத்தியைக் கட்டக்கூடாது, கால்நடை மருத்துவர் உடனிருக்கவேண்டும் என்பதுள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து அனுமதி அளிக்குமாறு ஆட்சியர், மற்றும் எஸ்.பி. ஆகியோருக்கு உத்தரவிட்டது.