பாபநாசம், பிப். 10: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள அய்யம்பேட்டையில் கைத்தறித் துறை வளர்ச்சி ஆணையம், சென்னை நெசவாளர் சேவை மையம் உள்ளிட்டவை இணைந்து நெசவாளர் சேவை முகாமை அண்மையில் நடத்தின.
முகாமில் நெசவாளர்களுக்கு அரசு மானியத்துடன் பிணையில்லா கடன் பெறும் விதிகள் மற்றும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெசவாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, கடன் பெறுவதற்கான அடையாள அட்டைகள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், சென்னை நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் பி. தென்னரசு, கும்பகோணம் கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநர் ஆர். நாராயணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் வி. அய்யப்பன், அய்யம்பேட்டை வஉசி கூட்டுறவு பட்டு சங்கத் தனி அலுவலர் எம். ராதாகிருஷ்ணன், இந்த சங்கத்தின் மேலாளர் ஏ.எல். சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.