பெரம்பலூர், பிப். 10: பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே, திருவள்ளுவர் திருவிழா அண்மையில் நடைபெற்றது.
திருவள்ளுவர் தவச் சாலை அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை அறங்காவலர் குறளடியார் மு. சீனிவாசன் தலைமை வகித்தார். நிறுவன அறங்காவலர் பாவலர் ஆடல் முன்னிலை வகித்தார்.
திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர் இரா. இளங்குமரனார் பேசியது:
உலகில் பொருளியல் மீட்பராக காரல் மார்க்ஸ், மான மீட்பராக தந்தை பெரியார், தமிழ் மீட்பராக மொழிஞாயிறு பாவாணர், தமிழர் மீட்பராக திருவள்ளுவரைக் கூறலாம்.
திருவள்ளுவர் தந்த தத்துவத்துக்கு, அருள்பிரகாச வள்ளலார் செயல் வடிவம் அளித்தார். எனவே, நாம் அனைவரும் திருவள்ளுவரின் கருத்துகளை அன்றாடம் செயல்படுத்தி, வள்ளலாரின் வழியில் வாழ வேண்டும் என்றார் அவர்.
இதில், தமிழ் இலக்கியப் பூங்கா தலைவர் பேராசிரியர் இரா. நாராயணசாமி, சித்த மருத்துவர் கோசிபா, நம் குறள் ஆர்வலர் பெ.செ. பரமசிவம், தமிழ் எழுச்சி மையப் பேராசிரியர் ஜாகீர் உசேன், நிர்வாகி முரளிதரன், உலகத் தமிழர் கழக கவிஞர் அகவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புலவர் ஆ. ராமர் வரவேற்றார். அறங்காவலர் காப்பியன் நன்றி கூறினார்.