திருக்காட்டுப்பள்ளி, பிப். 10: விண்ணமங்கலம் மேகளத்தூர் இடையே உள்ள தார்ச் சாலையை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எம். ரத்தினசாமி.
பூதலூர் ஊராட்சி ஒன்றியம், மேகளத்தூர் ஊராட்சியில் 277 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருள்களான மின் விசிறி, மிக்ஸி, கிரைன்டர் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு தஞ்சாவூர் மாவட்ட சிறப்பு செயலாக்கத் துறையின் துணை ஆட்சியர் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ். ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினர் ம. மணி, ஊராட்சித் தலைவர் லூயிஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்களை வழங்கி, எம். ரத்தினசாமி எம்எல்ஏ பேசியது:
இந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்று, விண்ணமங்கலம் முதல் மேகளத்தூர் வரை உள்ள சுமார் 5 கி.மீ. தார்ச் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதுதான். இந்தச் சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேகளத்தூரில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுக் கடையை மூடவேண்டும் என்று மக்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து அனைவரும் கையொப்பமிட்டு விண்ணப்பமாக அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நலத் திட்டங்கள் அனைத்தும் முறையான பயனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் கண்காணித்து வருகிறோம். குறிப்பாக, அனைத்து கட்சியினரும் பயன்படக்கூடிய வகையில் விலையில்லாப் பொருள்களை அளித்து வருகிறோம் என்றார் அவர்.
விழாவில் வட்டாட்சியர் சீனிவாசன், துணை வட்டாட்சியர் திரவியசாமி, திருக்காட்டுப்பள்ளி அதிமுக நகரச் செயலர் எம்பிஎஸ். ராஜேந்திரன், ஒன்றிய துணைச் செயலர் எம். மாரியையா, ஒன்றியக்குழு உறுப்பினர் மகாலட்சுமி ரவி, அதிமுக கிளைச் செயலர்கள் ஆர். செüந்தரராஜன், மாரனேரி கே. ரவி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் ரஞ்சன், அடஞ்சூர் கண்ணதாசன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் ஆர். காமராஜ், கிராம நிர்வாக அலுவலர் தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.