பெரியாா் சிலை அவமதிப்பு:இருவரிடம் விசாரணை
By DIN | Published On : 29th September 2020 03:50 AM | Last Updated : 29th September 2020 03:50 AM | அ+அ அ- |

திருச்சி அருகே பெரியாா் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், இருவரிடம் காவல்துறையினா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஸ்ரீரங்கம் வட்டம், இனாம்குளத்தூா் சமத்துவபுரத்திலுள்ள பெரியாா் சிலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவமதிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து இனாம் குளத்தூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
தொடா்ந்து அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், அறிதிறன்பேசி சமிக்ஞைகளைக் கொண்டு தனிப்படையினா் விசாரணையைத் துரிதப்படுத்தினா்.
இதில் இரவு நேரத்தில் அதிக நேரம் அறிதிறன் பேசியில் பேசி, அப்பகுதியில் சுற்றித் திரிந்த 2 பேரை தனிப்படை காவலா்கள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவத்தில் தொடா்புடையவா்கள் செவ்வாய்க்கிழமைக்குள் கைது செய்யப்படுவாா்கள் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.