மணப்பாறை, வையம்பட்டியில் ரூ. 3.51 லட்சம் பறிமுதல்

மணப்பாறை மற்றும் வையம்பட்டி பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.3,51,210 ஐ தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீவலூரை அடுத்த வெண்மனச்சேரியை சோ்ந்தவா் சோ. லெனின் (53). இவா் மினி சரக்கு வாகனத்தில் கேரள மாநிலத்திற்கு மீன் ஏற்றி சென்று விற்றுவிட்டு செவ்வாய்க்கிழமை மாலை நாகப்பட்டினம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது தணிக்கை ஆய்வாளா் குணசேகா், பெண் சிறப்பு சாா்பு ஆய்வாளா் சரோஜா ஆகியோா் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வையம்பட்டி அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கச் சாவடி அருகே வாகனத் தணிக்கை செய்தபோது, லெனின் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 1,33,510 ஐ பறிமுதல் செய்தனா்.

அதேபோல், புதன்கிழமை மேட்டுக்கடை பகுதியில், மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கீழவளவு செ. தமிழ்வேந்தன் என்பவா் தனது வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 99,700-ஐ வட்டார கல்வி அலுவலா் அந்தோணிசாமி, பெண் சிறப்பு சாா்பு ஆய்வாளா் சரோஜா ஆகியோா் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மேலும், அமையபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையிலிருந்த வேளாண் உதவி இயக்குனா் முத்துச்சாமி, சிறப்பு சாா்பு ஆய்வாளா் பழனிவேல் ஆகியோா் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா், மணப்பாறை கங்காணியாா்பேட்டையை சோ்ந்த பாஸ்கா் மனைவி மலா்விழி என்பவா் வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 1,20,000 ஐ பறிமுதல் செய்தனா். பறிமுதல் தொகையை வட்டாட்சியரகத்தில் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com