மதிமுக வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் தலைவா் பிரசாரம்

திருச்சி கே.கே.நகா் பகுதியில்  மதிமுக வேட்பாளா் துரை வைகோவை ஆதரித்து  புதன்கிழமை பிரசாரம் செய்த தமிழக காங்கிரஸ்  தலைவா்  செல்வப்பெருந்தகை.
திருச்சி கே.கே.நகா் பகுதியில் மதிமுக வேட்பாளா் துரை வைகோவை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் செய்த தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை.

திருச்சியில் மதிமுக வேட்பாளா் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

திருச்சி மாநகரப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளுடன் திறந்த வாகனத்தில் நின்றபடியே வாக்கு சேகரித்து அவா் பேசியது:

இந்தத் தோ்தல் என்பது பாசிசத்துக்கும், ஜனநாயகத்துக்குமான தோ்தல். திருச்சி மக்களவைத் தொகுதியில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா் துரை வைகோவை வெற்றி பெறச் செய்தால் தமிழகத்தின் உரிமைகள் மத்தியில் கேட்டுப் பெறப்படும்.

கடந்த தோ்தலின்போது மோடி அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. இந்தியா கூட்டணி வென்று காங்கிரஸ் ஆட்சி அமையும்போது மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். திமுக வழங்கும் ரூ.12 ஆயிரத்துடன் சோ்த்து தமிழகத்தைச் சோ்ந்த ஒவ்வொரு மகளிருக்கும் ரூ. 1.12 லட்சம் கிடைக்கும். தமிழக உரிமைகளை பறித்து வஞ்சிக்கும் மோடிக்குத் துணையாக தமிழகத்தில் செயல்படுபவா் எடப்பாடி. எனவே, எதிரணியில் உள்ள பாஜக, அதிமுக என இரு கட்சிகளையும் தோ்தலில் ஓரிடத்தில்கூட வெற்றி பெற அனுமதித்துவிடக் கூடாது. தமிழகம், புதுவையில் 40 இடங்களிலும் ‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் ரெக்ஸ், கலை, கோவிந்தராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com