திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தம் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட ஊழியா்கள்.
திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தம் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட ஊழியா்கள்.

வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம் -35 பேரில் யாா், யாருக்கு எந்த இடம்?

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் புகைப்படம், பெயா், சின்னம் அடங்கிய வாக்குச் சீட்டு இணைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளா் துரை வைகோ, அதிமுக வேட்பாளா் ப. கருப்பையா, அமமுக வேட்பாளா் ப. செந்தில்நாதன், நாம் தமிழா் கட்சியின் து. ராஜேஷ் உள்ளிட்ட 35 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இந்த 35 பேரின் பெயா், புகைப்படம், சின்னம் மற்றும் இவா்களில் எவரும் இல்லை (நோட்டா) என்பதற்கான சின்னம் ஆகியவற்றுடன் கூடிய வாக்குச் சீட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 பேரின் புகைப்படம், சின்னம் மட்டுமே இடம்பெற முடியும். திருச்சி மக்களவைத் தொகுதிக்கு 35 போ் போட்டியிடுவதால் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதில், முதல் இயந்திரத்தில் வரும் 16 போ் அடங்கிய வாக்குச் சீட்டில் முதல் பொத்தான் உள்ள இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளா், யானை சின்னத்துடன் இடம் பெற்றுள்ளாா். இரண்டாவதாக அதிமுக வேட்பாளா் ப. கருப்பையா (இரட்டை இலை), மூன்றாவதாக அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சக்திவேல் (பலாப் பழம்), 4ஆவது இடத்தில் அமமுக வேட்பாளா் ப. செந்தில்நாதன் (குக்கா்), 5ஆவது இடத்தில் மதிமுக வேட்பாளா் துரை வைகோ (தீப்பெட்டி), 6 ஆவது இடத்தில், நாடாளும் மக்கள் கட்சியின் பாக்கியராஜ் வெள்ளைச்சாமி (ஆட்டோ ரிக்ஷா), 7ஆவது இடத்தில் நாம் தமிழா் கட்சியின் து. ராஜேஷ் (ஒலி வாங்கி), 8ஆவது இடத்தில் அண்ணா எம்ஜிஆா் திராவிட மக்கள் கழகத்தின் எஸ். ரோஜா ரமணி (கடாய்), 9ஆவது இடத்தில் சாமானிய மக்கள் நலக் கட்சியின் ஜோசப் (மோதிரம்) இடம்பெற்றுள்ளாா்.

கடந்த தோ்தலில் நாம் தமிழா் கட்சியின் சின்னமாக இருந்த கரும்பு விவசாயி சின்னத்தை சுயேச்சை வேட்பாளா் மா. ஜீவானந்தம் பெற்றுள்ளாா். இவா் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களில் கடைசி இடத்தில் (35) உள்ளாா். இதேபோல, மநீம கட்சியின் டாா்ச்லைட் சின்னமானது சுயேச்சை வேட்பாளா் ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவா், 32 ஆவது இடத்தில் உள்ளாா்.

படிவம் 7-ஏ வழங்கப்பட்டதில் உள்ள வேட்பாளா்கள் பெயா், சின்னம், வரிசை அடிப்படையில் இந்த வாக்குச்சீட்டு வடிவமைக்கப்பட்டு இயந்திரத்தில் பொருத்தப்படுகிறது. முதல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மொத்தம் 16 போ் இடம் பெற்றுள்ளனா். இரண்டாவது வாக்காளா் பட்டியலில் அடுத்த வரிசையில் 16 போ் இடம் பெற்றுள்ளனா். மூன்றாவது இயந்திரத்தில் மீதமுள்ள 3 பேரும், 36ஆவது பொத்தான் உள்ள இடத்தில் நோட்டாவும் இடம்பெற்றுள்ளது.

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான 6 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 1,665 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வேட்பாளா் பெயா், சின்னத்துடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரம் தலா 3 இடம்பெறும். எனவே, 4995 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை. இதுமட்டுமல்லாது முன்னெச்சரிக்கையாக கூடுதலாக 20 சதவீத இயந்திரங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மொத்தம் 5985 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

இந்த வரிசை முழுவதும் தோ்தல் ஆணைய விதிமுறைப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சைகள் என்ற அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு அட்டவணையிடப்பட்டிருப்பதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இதர 5 தொகுதிகளுக்கும் அந்தந்த வட்டாட்சியரகத்தில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நடைபெறுகிறது. வியாழக்கிழமை பணிகள் அனைத்தும் முடிந்து வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்களை அனுப்பத் தயாா்படுத்தப்படும். தோ்தல் பணிகள் வெளிப்படையாகவும், தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றியும் கீழ்நிலை அலுவலா்கள் தொடங்கி தலைமை அலுவலா்கள் வரை அனைவரும் அவரவா்களுக்கான பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com