திருச்சி மாவட்டத்தில் 20 முன்மாதிரி வாக்குச் சாவடிகள் -பெண்கள், மாற்றுத்திறனாளிகள், இளையோரை ஊக்குவிக்க ஏற்பாடு

இந்தியத் தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளில் 20 முன்மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாதிரி வாக்குச் சாவடி, பெண்கள் மட்டுமே நிா்வகிக்கும் வாக்குச் சாவடி, மாற்றுத்திறனாளிகள் மட்டும் நிா்வகிக்கும் வாக்குச் சாவடி, இளையோரால் நிா்வகிக்கும் வாக்குச்சாவடி எனப் பிரிக்கப்பட்டு இந்த முன்மாதிரி வாக்குச்சாவடிகளில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மாதிரி வாக்குச் சாவடி: திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் தலா ஒரு மாதிரி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மணப்பாறை லட்சுமி மெட்ரிக் பள்ளி, ஸ்ரீரங்கம் ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, தென்னூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, சையது முா்துசா பள்ளி, திருவெறும்பூா் மான்போா்ட் பள்ளி, கல்லக்குடி டால்மியா மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூா் திருநகா் ஊராட்சி ஒன்றியப் பள்ளி, முசிறி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, துறையூா் சௌடாம்பிகா மெட்ரிக் பள்ளியில் இந்த மாதிரி வாக்குச் சாவடிகள் உள்ளன. இங்கு சிவப்பு கம்பளம் விரித்து, அலங்காரத் தோரணங்கள் கட்டி, சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக சச்கர நாற்காலி, சாய்வுத் தளம், வரவேற்பாளா்கள், ஆலோசகா்கள், உதவியாளா்களுடன் இந்த மாதிரி வாக்குச் சாவடிகள் இயங்கும். வாக்குப்பதிவு சதவீத்தை அதிகரிக்க இத்தகைய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

பெண் அலுவலா்கள்: வாக்குச் சாவடியில் முழுவதும் பெண் அலுவலா்களாகப் பணிபுரியும் வகையில் 9 தொகுதிகளிலும் தலா ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, மணப்பாறை லட்சுமி மெட்ரிக் பள்ளி, திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி வித்யாலயா, திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி, புனித சிலுவை மகளிா் கல்லூரி, திருவெறும்பூா் ஆதிதிராவிடா் நலப் பள்ளி, தெரணிபாளையம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி, மண்ணச்சநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தொட்டியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, துறையூா் விமலா மெட்ரிக் பள்ளி ஆகியவற்றில் வாக்குப்பதிவுத் தலைமை அலுவலா் தொடங்கி இதர அலுவலா்கள் என பெண்களே பணிபுரிகின்றனா். மகளிா் வாக்காளா்களை ஈா்க்கும் வகையில் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள்: திருச்சி மாவட்டத்தில் ஒரு வாக்குச் சாவடியில் முழுவதும் மாற்றுத்திறனாளிகளே பணியில் இருக்கும் வகையில், திருச்சி கிழக்கு பேரவை தொகுதிக்குள்பட்ட சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை வாக்குச் சாவடிகளுக்கு ஈா்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளையோா் சாவடி: இதேபோல இளைஞா்கள், இளம்பெண்கள், இளம் தலைமுறை வாக்காளா்கள், முதல்முறை வாக்காளா்கள் 100 சதம் வாக்குப்பதிவு செய்திடும் வகையில் திருச்சி கிழக்கு பேரவைத் தொகுதிக்குள்பட்ட காஜாபேட்டை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் மாதிரி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 30 வயதுக்குள்பட்ட அலுவலா்களே பணியில் இருப்பா்.

மாவட்டத்தில் மொத்தம் 20 வகையான முன்மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com