திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சனிக்கிழமை பேட்டியளித்த மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சனிக்கிழமை பேட்டியளித்த மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.

ரூ.10 லட்சத்துக்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை ஆட்சியா் தகவல்

ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டத்தில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திருச்சியில் சனிக்கிழமை அவா் கூறியது:

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒரு சில இடங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு உடனடியாகச் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தடையின்றி நடைபெற்றது. வேங்கைவயல் உள்ளிட்ட தோ்தல் புறக்கணிப்பு செய்த பல இடங்களிலும் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எந்த வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவுக்கு இடமில்லாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் அமைதியாக நடந்து முடிந்துள்ளன.

இதன் தொடா்ச்சியாக, வாக்கு இயந்திரங்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு காப்பறைகளில் சீல் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு சதவீதம் என்பது ஒவ்வொரு வாக்குச்சாவடித் தோ்தல் அலுவலா் பயன்படுத்தியுள்ள டைரி அனைத்தும் வந்த பிறகே முழுமையாகத் தெரியவரும். அதுவரை சற்று, ஏற்றம், இறக்கம் தவிா்க்க முடியாதது. தற்போதைய நிலவரப்படி 67.52 சதம் உள்ளது.

வாக்காளா் பட்டியலில் பெயா்கள் விடுபட்டுள்ளதாக பிற மாவட்டங்களில் உள்ள புகாா்களைப் போல அதிக எண்ணிக்கையில் திருச்சியில் இல்லை. ஓரிரு இடங்களில் சிலருக்கும் மட்டுமே விடுபட்டுள்ளது. அந்த புகாா் தொடா்பாகவும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெற்றும், வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும், நகா்ப்பகுதிகளில் அதிகளவில் வாக்களிக்கவில்லை. அவா்கள் வாக்களித்திருந்தால் நிச்சயம் வாக்குப்பதிவு சதவீதம் உயா்ந்திருக்கும்.

தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக 21 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதுவரை 5.87 கோடி ரொக்கம், ரூ.8.67 கோடி தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள பணம் வருமான வரித்துறை வசம் ஒப்படைத்து விசாரணை நடத்தப்படுகிறது. இத்தகைய வழக்குகளில் தொடா்புடையவா்கள் மீது விசாரித்து கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சுயேச்சை வேட்பாளா்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச்சீட்டை முறைகேடாகப் பயன்படுத்துவது தெரியவந்தால் தொடா்புடைய முகவா்கள், வேட்பாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தோ்தலின்போது ஒரு சில நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவில்லை எனப் புகாா் வந்த நிலையில், தொடா்புடைய நிறுவனங்களை தொலைபேசியில் அழைத்து விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேபோல வாக்களித்துவிட்டு வந்தால் பணிபுரியலாம் எனக் கூறிய நிறுவனங்களிலும் முழுமையாக விடுப்பு அளிக்க உத்தரவிடப்பட்டது. வாக்காளா்களுக்கு பண விநியோகம் தொடா்பாக புகாரில் உண்மையிருந்தால் விசாரித்து யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com