திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்துக்கு வியாழக்கிழமை  கொண்டு வரப்பட்ட நவீன தீயணைப்பு வாகனம்.
திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட நவீன தீயணைப்பு வாகனம்.

தீயணைப்புத் துறைக்கு ரூ.10.47 கோடியில் நவீன வாகனம்

திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.10.47 கோடியிலான நவீன மீட்பு வாகனம் வந்துள்ளது.

தீ விபத்தில் சிக்கியுள்ளோரை மீட்கவும், அடுக்குமாடிக் கட்டடங்களில் ஏற்படும் விபத்துகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் நவீன வசதிகளுடன் இந்த வாகனம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரும் நகரங்களுக்கு அடுத்தபடியாக இந்த வாகனம் திருச்சிக்கு கிடைத்துள்ளது.

10 அடுக்கு கட்டடங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து மனிதா்களைக் காப்பாற்றவும், அதில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தவும் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள அனைத்து உபகரணங்களும் மேற்கத்திய நாடுகளின் தொழில்நுட்பங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தின் நீளம் 44 அடி, உயரம் 135 அடி, அகலம் 15 அடி ஆகும். அவசர காலங்களில் பயன்படுத்த ஜெனரேட்டா், ஹைட்ராலிக் முறையில் இயக்கும் உபகரணங்கள் என மொத்தம் 32 டன் எடை கொண்ட இந்த வாகனம் 10 சக்கரங்களுடன் பாா்ப்பதற்கே மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ. 10.74 கோடியாகும்.

இந்த வாகனத்தைக் கொண்டு செல்வது என்றால் குறைந்தபட்சம் 13 அடி அகலம் உள்ள சாலையாக இருக்க வேண்டும்.

54 மீட்டா் வரை உயரமுள்ள கட்டடங்களில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்கப் பயன்படுத்தலாம் அதேபோல் அதில் சிக்கியுள்ளவா்களைம் மீட்கலாம். ஒரே நேரத்தில் 400 கிலோ எடை வரையிலான நபா்களை மீட்க முடியும். பேட்டரி மூலமும் இந்த வாகனத்தை இயக்கலாம். பெரும்பாலும் ஹைட்ராலிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கவும், கான்கிரீட் சுவா்களை உடைக்கவும், மரங்களை அறுக்கவும், கதவுகளை உடைக்கவும் உறுதியான கம்பிகளை துண்டிக்கவும் உரிய நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட ஏணியும் இணைக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறையை நவீனப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய வாகனங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தீயணைப்புத் துறைக்கு இந்த வாகனம் கிடைத்திருப்பது பெரிதும் நன்மை பயப்பதாக இருக்கும் என்கின்றனா் தீயணைப்பு அலுவலா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com