செல்வ மாரியம்மன் கோயிலில் பால்குட விழா

திருச்சி மேலப்புதூா் செல்வ மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பால்குட விழா நடைபெற்றது.

இக்கோயிலின் சித்திரை திருவிழா ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஏப். 20 முதல் ஏப். 25-ஆம் தேதி வரை மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் ஏப்ரல் 26-ஆம் தேதி அம்மன், குதிரை வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சியும், 27-ஆம் தேதி பொங்கலிடுதல், மாவிளக்கு பூஜைகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பால்குட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் திருச்சி காவிரி அய்யாளம்மன் படித்துறையில் இருந்து தீா்த்தம், பால்குடம், அக்னி சட்டி, காவடியுடன் பக்தா்கள் ஊா்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து மகா அபிஷேகம் மற்றும் அன்னதானமும், இரவு 7 மணியளவில் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் மற்றும் உற்ஸவ அம்மன் ஊஞ்சல் அலங்கார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவில், திங்கள்கிழமை (ஏப். 29) சங்கிலி கருப்பு மற்றும் மதுரைவீரன் சுவாமிகளுக்கு ஆட்டுக் கிடாக்கள் பலியிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராடல் மற்றும் சக்தி கரகம் வீதியுலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏப்ரல் 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com