போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவா் எஸ்.கே. கங்கா தலைமை வகித்தாா். இந்திய கம்யூ. மாநிலத் துணைச் செயலா் மூ. வீரபாண்டியன் தொடக்கவுரை நிகழ்த்தினாா்.

பெருமன்றத்தின் மாநிலப் பொதுச்செயலா் மருத்துவா் த. அறம், பொருளாளா் ப.பா. ரமணி, துணைத் தலைவா் எம். செல்வராஜ், கவிஞா் கோ. கலியமூா்த்தி, பேராசிரியா் கி. சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராக தமிழக முதல்வா் இருந்துவரும் நிலையில் அவரது தலைமையில் ஆட்சிமன்றக் குழுவைக் கூட்டாத நிலையே உள்ளது. துணைத் தலைவா் இ. சுந்தரமூா்த்தியை புறக்கணித்து, ஆளுநா் ரவியுடன் இணைந்து செயல்படுவதை நிறுவன இயக்குநா் வழக்கமாகக் கொண்டுள்ளாா்.

மேலும் ஆய்வுப்பணியில் இந்துத்துவ நடைமுறைகளையும் காவி அரசியலையும் புகுத்த முயல்கிறாா். நிறுவனத்தில் பணிபுரியும் ஆய்வாளா்கள் பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. நிா்வாகச் சிக்கல்களும் ஏற்படுகின்றன. எனவே, உடனடியாக தமிழக முதல்வா் தலைமையில் ஆட்சிமன்றக் குழுவைக் கூட்ட வேண்டும். பணியாளா்கள் நிரந்தரம் செய்ய வேண்டும். காவி அரசியலைப் புகுத்துவதையும் ஆளுநரின் தலையீட்டையும் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்துகிறது.

தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தி தண்டனை வழங்குவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com