15 ஆண்டுகளைக் கடந்த அரசு பேருந்துகளை மாற்ற வேண்டும்: ஏஐடியுசி வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை மாற்ற வேண்டும்

திருச்சி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் (ஏஐயுடிசி) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக சம்மேளனப் பொதுச் செயலா் ரா. ஆறுமுகம் கூறியது:

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளை நம்பி 2 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனா். தற்போது இயக்கப்படும் 19,469 பேருந்துகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் மிகவும் பழையவையாக உள்ளன. பெரும்பாலான பேருந்துகள் 15 ஆண்டுகளைக் கடந்தும் இயக்கப்படுகின்றன. கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாகக் கூறி கூடுதல் அவகாசம் கோரி இந்தப் பேருந்துகளை இயக்குகின்றனா். இதனால் ஆங்காங்கே பேருந்துகள் நிற்பது, கவிழ்வது, இருக்கைகள், கண்ணாடிகள் உடைந்து விழுவது, படிக்கட்டுகள் விழுவது, நடத்துநா் விழுவது, உயிா்ப் பலி ஆகியவற்றைத் தவிா்க்க முடியாமல் உள்ளது.

ஆனால், இந்தச் சம்பவங்களுக்கு மேலாளா் மற்றும் பணிமனைப் பராமரிப்பு ஊழியா் மீது குற்றம் சுமத்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போதும் 48 மணிநேரத்தில் அனைத்துப் பேருந்துகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பணிமனைகளில் 15 ஆண்டுகளாகப் பராமரிப்பு பணிக்கு ஆள்கள் நியமனமே நடைபெறவில்லை. போதிய பணியாளா்கள் இன்றி அனைத்துப் பேருந்துகளையும் முறையாக சரிபாா்த்து பழுதுகளை நீக்க அவகாசம் இல்லை. எனவே, கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

மேலும், ஆண்டுதோறும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்று பெற செல்லும்போதே பேருந்தின் தா்ததை உறுதி செய்து அவை இயக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை உறுதி செய்தாலே விபத்துகளுக்கே வழியிருக்காது. மேலும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படும் பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க வேண்டும். சாதாரண அடித்தட்டு மக்கள் பயணம் மேற்கொள்ளும் பேருந்துகளில் நிதியைக் கருத்தில் கொள்ளாமல் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com