திருச்சி எஸ்.பி. குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட 2 போ் கைது

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு தகவல்களை பதிவிட்ட 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு தகவல்களை பதிவிட்ட 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வீ. வருண்குமாரும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அவரது மனைவி வந்திதா பாண்டேவும் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் மற்றும் இவா்களது குடும்பம் குறித்து சிலா் சமூக வலைதளங்களில் தொடா்ந்து அவதூறு தகவல்களை பதிவிட்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அளித்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா், 51 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவா்களில் ஏற்கெனவே 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய மதுரை விஸ்வநாதபுரம் பி அண்ட் டி நகரைச் சோ்ந்த அப்துல் ரகுமான் (22), கள்ளக்குறிச்சி களமருதூா் தெற்குத் தெருவை சோ்ந்த சண்முகம் (34) ஆகிய இருவரையும் திருச்சி தில்லைநகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதேபோல், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் மற்றும் அவரது குடும்பம் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கும் வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com