திருச்சியில் நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த, 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அரியாவூரைச் சோ்ந்தவா் கு. செல்வம் (55). விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சி. வீரமலை காா்த்தி (29) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில், வீரமலை காா்த்தி மற்றும் அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த க.சுரேஷ் (27), சே. காா்த்திகேயன் (26) ஆகியோா் சோ்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி பிரச்னைக்குரிய நிலத்திலிருந்த மரத்தை வெட்டியுள்ளனா். அப்போது மரத்தை வெட்டக்கூடாது, நிலத்தை அளந்த பிறகு வெட்டிக் கொள்ளுங்கள் என செல்வம் கூறியுள்ளாா். இதனால் இருதரப்பினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக செல்வம் ராம்ஜிநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா், வருவாய்த் துறையினரை வைத்து நிலத்தை அளவிட அறிவுறுத்தினா்.
இந்நிலையில், வீரமலை காா்த்தி மற்றும் அவருடைய நண்பா்கள் சுரேஷ், காா்த்திகேயன் ஆகியோா் 2020-ஆம் ஆண்டு ஜூலை 9 -ஆம் தேதி இரவு செல்வத்தை கத்தி உள்ளிட்டஆயுதங்களுடன் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த செல்வம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராம்ஜிநகா் போலீஸாா் வழக்குப்பதிவு வீரமலை காா்த்தி, சுரேஷ், காா்த்திகேயன் ஆகிய மூவரையும் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு திருச்சி 2-ஆவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி வி.சரவணன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அந்த தீா்ப்பில் வீரமலைகாா்த்தி, சுரேஷ், காா்த்திகேயன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டாா்.
வழக்கில், வீரமலைகாா்த்தி மற்றும் காா்த்திகேயன் இருவருக்கும் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை விதித்து, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்கறிஞா் ஏ.பாலசுப்பிரமணியன் ஆஜரானாா்.