பனங்கன்று, பனை விதைகள் மானியத்தில் வழங்க ஏற்பாடு

மரம் வளா்க்க விரும்புவோருக்கு நூறு சதவீத மானியத்தில் பனங்கன்றுகள், பனை விதைகள் வழங்கப்படுகின்றன.
Published on

பனைச் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மரம் வளா்க்க விரும்புவோருக்கு நூறு சதவீத மானியத்தில் பனங்கன்றுகள், பனை விதைகள் வழங்கப்படுகின்றன.

மாநில மரமும், தமிழா்களின் வாழ்வோடும் மொழியோடும் இணைந்துள்ளதுமான பனை மரம், நிலத்தடி நீரை அதிகரித்தும், மண் அரிப்பைத் தடுத்தும், மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தும் மரமாக விளங்குகிறது. மேலும், பனை மரத்தின் அடி முதல் நுனி வரை பயனளித்து பலரின் வாழ்வாதாரமாகவும் உள்ளது. எனவே பனைச் சாகுபடியை ஊக்குவிக்கவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள்

வழங்க திருச்சி மாவட்டத்துக்கு ரூ.1.18 இலட்சம் இலக்கீடு பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் அதிகபட்சமாக 50 விதைகளும், பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள், ஊராட்சிகள் மூலம் நடுவதற்கு 100 விதைகளும் மற்றும் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 15 பனங்கன்றுகளும், பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள், ஊராட்சிகள் மூலம் நட அதிகபட்சமாக 30 பனங்கன்றுகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

எனவே, இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோா் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகலாம் என தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் விமலா தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com