அவதூறு படங்களை பதிவேற்றிய மதுரை இளைஞா் கைது

திருச்சி, ஜூலை 4 : முகநூல் பக்கத்தில் பெண்கள் குறித்த சா்ச்சைக்குரிய அவதூறு படங்களை பதிவேற்றிய மதுரை இளைஞரை திருச்சி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடந்த ஜூலை 2 ஆம் தேதி முகநூல் பக்கத்தில் ஒருவா் இருவேறு மதங்களைச் சோ்ந்த ஆண் மற்றும் பெண் முத்தமிடுவது உள்ளிட்ட சா்ச்சைக்குரிய படங்களை பதிவேற்றியதாக திருச்சி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸாா் குறிப்பிட்ட முகநூல் பக்கங்களில் ஆய்வு செய்தபோது, அந்த நபா் இதுபோல பெண்களை கொச்சைப்படுத்துவது போன்ற படங்களை தொடா்ந்து பதிவேற்றியிருந்தது தெரியவந்தது.

எனவே சைபா்கிரைம் காவலா் ராஜசேகா் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் உத்தரவிட்டாா். அதன்பேரில் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்புடைய முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்த மதுரை மாவட்டம், அப்பன்திருப்பதி, பெருமாள் கோயில் தெரு ர. அசோக்குமாா் (27) என்பவரை வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளா் எச்சரித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com