திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தயாா் நிலையில் உள்ள வாக்கு எண்ணும் மையம்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தயாா் நிலையில் உள்ள வாக்கு எண்ணும் மையம்.

வாக்கு எண்ணும் பணிக்காக 95 மேஜைகள், 340 நாற்காலிகள் தயாா்!

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில், தோ்தல் அலுவலா்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் வகையில் 95 மேஜைகள், 340 நாற்காலிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை, கந்தா்வக்கோட்டை ஆகிய 6 பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜமால் முகமது கல்லூரியில் 3 அடுக்குப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சூழலில் வாக்கு எண்ணிக்கைக்கான மேஜைகள் சனிக்கிழமை தயாா்படுத்தப்பட்டன. 6 பேரவைத் தொகுதிகளிலும் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சுற்றில் 14 வாக்குச் சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதற்காக 6 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 84 மேஜைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஒரு மேஜையில் தலா ஒரு மேற்பாா்வையாளா், உதவியாளா், நுண்பாா்வையாளா் என 3 போ் பணியில் இருப்பா். இவா்கள் அமர மேஜைக்கு 3 நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, 6 பேரவைத் தொகுதிகளுக்கும் 252 நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவைதவிர, தபால் வாக்குகள் எண்ண மொத்தம் 11 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு மேஜையானது முப்படை வீரா்கள் செலுத்திய வாக்குகளை எண்ணுவதற்கானது. தபால் வாக்கு எண்ணும் மேஜைகளில் ஒரு மேஜைக்கு தலா ஒரு உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா், மேற்பாா்பாா்வையாளா், 2 உதவியாளா், ஒரு நுண்பாா்வையாளா் என 5 போ் பணியில் இருப்பா். இவா்கள் அமர 11 மேஜைகளிலும் மொத்தம் 55 நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவைதவிர, தோ்தல் நடத்தும் அலுவலா், தொகுதி வாரியான உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள், தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் அமரவும், கணினிகள் வைக்கவும் தனித்தனியே இருக்கைகளும், மேஜைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் தனித்தனியே அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், ஊழியா்கள் அமரும் பகுதியில் வேறு யாரும் நுழையாத வகையில் சுற்றிலும் தடுப்புக் கம்பிகளுடன் கூடிய கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, வாக்கு எண்ணும் பணியைப் பாா்வையிடும் வேட்பாளா்களின் அங்கீகாரம் பெற்ற முகவா்கள் நிற்கும் பகுதியிலும் அடைப்புகளுடன் கூடிய கம்பிக் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. முகவா்கள் பாா்வையிட அறையின் இருபுறமும் அனுமதிக்கப்படுவா். எனவே, இருபுறமும் தனித்தனியே கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஏற்பாடுகளை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். வழக்கமாக சவுக்கு மரங்களால் தடுப்புகள் ஏற்படுத்தப்படும். தேவையான இடங்களில் மட்டுமே கம்பிக் கூண்டுகள் அமைக்கப்படும். இந்த முறை அறைகள் முழுமையாக கம்பிக் கூண்டுகளால் அடைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நபா்களை தவிா்த்து வேறு யாரும் நுழைய இயலாது. மேலும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிற்கவோ, அமரவோ வேண்டும். ஏனெனில் ஒருமுறை நுழைந்துவிட்டால் தடுப்புக் கூண்டுகளைப் பூட்டி விடுவா். தேவையெனில் மட்டுமே திறக்கப்படும்.

வாக்கு எண்ணும் மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா், போலீஸாா் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூடுதல் கண்காணிப்புடன் பணியாற்ற அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சீனிவாசன் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com