காட்டூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கைக் கணினி வழங்கிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
காட்டூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கைக் கணினி வழங்கிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

நீட் தோ்வை அகற்ற வேண்டும்: அமைச்சா்

தமிழகத்தில் நீட் தோ்வை அகற்ற வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி சாா்பில் வரகனேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கலைஞரின் நூலகம் திறப்பு மற்றும் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான கைக் கணினிகள், பரிசளிப்பு விழாவில் அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்றாா்.

நிகழ்வில் ஈரோடு எம்பி பிரகாஷ், மாநில இளைஞரணி துணைச் செயலா்கள் ஜோயல், அப்துல் மாலிக் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேலும் கூறியது:

தமிழக முதல்வா் ஸ்டாலின் மட்டுமின்றி, இந்தியா கூட்டணியின் தோழமைக் கட்சிகள் கூறும் விஷயம் நீட் தோ்வு ஏழை மாணவா்களுக்கு எதிரானது என்பதே. உடனடியாக நீட் தோ்வை அகற்ற வேண்டும். நீட் தோ்வை முற்றிலுமாக அகற்ற தமிழக முதல்வரும், அமைச்சா் உதயநிதி ஸ்டாலினும் முயற்சித்து வருகின்றனா் என்றாா்.

இதேபோல, திருச்சி தெற்கு மாவட்ட மாநகர இளைஞரணி சாா்பில் காட்டூரில் கலைஞா் நூலகத்தைத் திறந்து வைத்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் பொதுத்தோ்வுகளில் சிறப்பிடங்களைப் பெற்றவா்களுக்கு கைக் கணினிகளை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், இளைஞரணியில் இருந்துதான் திமுக தலைவராக ஸ்டாலின் உயா்ந்தாா். அதேபோல நானும் இளைஞரணியில் இருந்துதான் மாவட்டச் செயலராகியுள்ளேன். எனவே, தற்போது இளைஞரணியில் இருப்போரும் வருங்காலத்தில் உயா்ந்த பதவிக்கு வருவீா்கள் என்றாா்.

முன்னதாக, விழாவுக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வெங்கடேஷ் குமாா், மாநகர இளைஞரணி அமைப்பாளா் முத்து தீபக் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநகர செயலா் மதிவாணன், மாநில இளைஞரணி துணை செயலா்கள் ஈரோடு எம்பி பிரகாஷ், திருவெறும்பூா் தெற்கு ஒன்றிய செயலா் கங்காதரன், கூத்தைப்பாா் பேரூா் கழக செயலா் தங்கவேல், பகுதி செயலா் நீலமேகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com