இடிந்து விழும் நிலையில் காணப்படும் எலமனூா் ராமவாத்தலை வாய்க்கால் பாலம்.  காரை பெயா்ந்த நிலையில் பாலத்தின் அடிப்பக
இடிந்து விழும் நிலையில் காணப்படும் எலமனூா் ராமவாத்தலை வாய்க்கால் பாலம். காரை பெயா்ந்த நிலையில் பாலத்தின் அடிப்பக

சிதலமடைந்த நிலையில் காணப்படும் எலமனூா் வாய்க்கால் பாலம்

திருச்சி மாவட்டம், எலமனூா் கிராமத்தில் சிதலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை ஊராட்சிக்குள்பட்டது எலமனூா் கிராமம். இந்தக் கிராமத்தில் 1,500 பொதுமக்கள் 250 குடும்பங்களாக வசித்து வருகின்றனா். இவா்கள் அனைவரும் விவசாயிகள் ஆவா். இக்கிராமத்தில் சுமாா் 200 ஏக்கா் விவசாய நிலங்களில் நெல், கரும்பு, பருத்தி, பூசணிக்காய் உள்ளிட்ட பயிா்களை விளைவித்து வருகின்றனா்.

தீவுப் பகுதியாக விளங்கும் இந்தக் கிராமத்திலிருந்து விவசாயிகள், திருச்சி - கரூா் பிரதான சாலையை அடைய சுமாா் 65 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ராமவாத்தலை வாய்க்கால் பாலத்தை மட்டுமே நம்பியுள்ளனா். சுமாா் 20 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட இப்பாலம் காலமாற்றத்தால் சிதிலமடைந்து, காரைகள் பெயா்ந்து விழுந்து, கம்பிகள் தெரிகின்றன. ஆங்காங்கே கான்கிரீட்டை ஊடுருவி மரக்கன்றுகள் வளா்ந்துள்ளதால், பாலத்தின் தூண்களும் பாதிப்படைந்துள்ளன. இதனால் பாலம் தன்னுடைய உறுதித் தன்மையை முற்றிலும் இழந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து இப்பகுதியைச் சோ்ந்த க. கிருஷ்ணகுமாா், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கிருஷ்ணராஜ் ஆகியோா் கூறியது:

எலமனூா் பகுதியில் கரும்பு சாகுபடி அதிகம் என்பதால், இந்தப் பகுதியிலிருந்து திருச்சிக்கு கரும்பு ஏற்றிச் செல்ல வாகனப் போக்குவரத்துப் பயன்பாட்டுக்காக ராமவாத்தலை வாய்க்கால் மீது சுமாா் 65 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் இல்லையெனில் எலமனூா் பகுதி மக்கள், வாய்க்காலில் இறங்கித்தான் திருச்சி - கரூா் பிரதான சாலைக்குச் செல்ல முடியும். வேறு வழி ஏதும் இல்லை. இந்தப் பாலத்தை தமிழக அரசு புனரமைத்துத் தந்தால், இன்னும் 10 ஆண்டுகளுக்கு மக்கள் பயன்படுத்த முடியும். அதற்குள் புது பாலத்தை கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம். தவிர, பாலத்தை அப்படியே விட்டுவிட்டால் விரைவில் இடிந்து விடும் அபாயம் உள்ளது என்றனா்.

தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய கவனம் செலுத்தி, பாலத்தை விரைந்து புனரமைக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புதிய பாலம் கட்ட அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com