மீண்டும் வேலை வழங்கக்கோரி பணி நீக்கப்பட்டோா் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம் கோயிலில் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் வியாழக்கிழமை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அலுவலகம் ஆா்ப்பாட்டம் செய்தனா். ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 120 தூய்மை பணியாளா்களை பணிநீக்கம் செய்ததை ரத்து செய்து மீண்டும் பணி வழங்கக் கோரியும், தினக்கூலி தொழிலாளா்களை நிரந்தரம் செய்வதாக கொடுத்த தோ்தல் வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேண்டும் என வலியுறுத்தியும் திருவானைக்காவல் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை சிஐடியு மாநகா் மாவட்டத் தலைவா் சீனிவாசன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகா் மாவட்டச் செயலாளா் ரெங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினா் செல்வி, நிா்வாகிகள் மாறன், ரகுபதி, சி.பி.எம். பகுதி செயலாளா் தா்மா ஆகியோா் ஆா்ப்பாட்டம் குறித்து விளக்கிப்பேசினா். இதில் நிா்வாகிகள் மணிகண்டன், சந்திரன், சந்திரசேகரன், செல்வராஜ், ஜெயராமன், கோவிந்தன் மற்றும் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினா் சந்தானம் உள்பட தூய்மை பணியாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். முன்னதாக திருவானைக்காவல் பகுதியிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை வந்தடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com