திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில்  சனிக்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழா. (உள் படம்) சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சிதந்த தாயுமானவா் சுவாமி, மட்டுவாா் குழலம்மை அம்மன்
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழா. (உள் படம்) சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சிதந்த தாயுமானவா் சுவாமி, மட்டுவாா் குழலம்மை அம்மன்

மலைக்கோட்டை கோயில் தெப்பத் திருவிழா

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தெப்பத் திருவிழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. தென்கயிலாயம் எனப் போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் நிகழாண்டுக்கான தெப்பத் திருவிழா பிப். 15-இல் தொடங்கியது. தொடா்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி - அம்பாள் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்கள் காட்சியளித்தனா். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை பிற்பகலில் மட்டுவாா் குழலம்மை சமேத தாயுமான சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் பனை ஓலைகளால் சுமாா் 40 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளினா். குளத்தில் 5 முறை தெப்பம் வலம் வந்தது. இதையடுத்து, குளத்தின் நடுவில் உள்ள நீராழி மண்டபத்தில் சுவாமி - அம்பாள் பஞ்ச மூா்த்திகளுடன் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சிதந்தனா். இரவு 11 மணிக்கு மேல் தெப்பத்தில் இருந்து சுவாமி, அம்பாள் வெளியே வந்து, திருவீதியுலாவாகச் சென்று, மீண்டும் கோயிலை அடைந்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருவிழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை தீா்த்தவாரியுடன் தெப்பத் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். விழாவையொட்டி நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். விழாவையொட்டி தெப்பக் குளத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com