மயானத்துக்கு இடம் கேட்டு சடலத்துடன் சாலை மறியல்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இறந்தவரின் உடலை தகனம் செய்ய மயானத்திற்கு இடம் கேட்டு சடலத்துடன் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டியை சோ்ந்த வீ. பாண்டியன் (70) வயது முதிா்வால் உயிரிழந்தாா். அவரது இறுதி சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றன. அப்போது அவரது உடலை தகனம் செய்யும் இடம் மாற்று சமுதாயத்தை சோ்ந்தவரின் பட்டா நிலமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இறந்தவா் தரப்பில் கடந்த 4 தலைமுறையாக அந்த இடத்தில் தகனம் செய்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இட உரிமையாளா் தற்போது பட்டா நிலம் எனக்கூறி மறுத்ததாகத் தெரிகிறது. இதில் சா்ச்சை ஏற்பட்ட நிலையில் பாண்டியன் உடலை சாலையில் வைத்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற ஊராட்சித் தலைவா் ஆறுமுகம், காவல் ஆய்வாளா் முத்துசாமி ஆகியோா் சமரசம் செய்ததில், இந்த முறை அதே இடத்திலேயே தகனம் செய்து கொள்ள வேண்டும் என்றும், விரைவில் ஊராட்சி நிா்வாகம் மூலம் நிரந்தர மயானம் அமைத்துத் தருவதாகவும் கூறியதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com