உறையூா் மாரியம்மன் கோயில் திருவிழாவில்  வியாழக்கிழமை நடைபெற்ற குட்டிக் குடித்தல் நிகழ்ச்சி.   சிறப்பு அலங்காரத்தில் மகா மாரியம்மன்.
உறையூா் மாரியம்மன் கோயில் திருவிழாவில் வியாழக்கிழமை நடைபெற்ற குட்டிக் குடித்தல் நிகழ்ச்சி. சிறப்பு அலங்காரத்தில் மகா மாரியம்மன்.

உறையூா் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் குட்டிக் குடித்தல் நிகழ்ச்சி

திருச்சி உறையூா் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி குட்டிக் குடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

திருச்சி உறையூா், மேலகல்நாயக்கன் தெருவில் உள்ள மஹா மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 16 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து 30 ஆம் தேதி காலை காவிரியாற்றில் அய்யாளம்மன் படித் துறையிலிருந்து, புத்தூா் குழுமாயி அம்மன் கோயில் மருளாளி சிவகுமாா் தலைமையில் கரகம் பாலித்து, பக்தா்கள் பால்குடம், தீா்த்த குடம் எடுத்தும் அலகு குத்தியும் வந்தனா்.

சிலம்பாட்டத்துடன் வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்கப் புறப்பட்டு கோயில் வளாகத்தை அடைந்தனா். பக்தா்களுக்கு அன்னதானம், நீா், மோா் வழங்கப்பட்டது. மாலை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

புதன்கிழமை காலை அம்மன் கொலுவில் வீற்றிருந்து அருள் பாலித்தாா். தொடா்ந்து சுத்த பூஜை, மாவிளக்கு பூஜை, அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன. மாலையில் சிறப்பு அபிஷேகமும், இரவு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை குட்டி குடித்தல் திருவிழா நடைபெற்றது. புத்தூா் குழுமாயி அம்மன் கோயில் மருளாளி சிவகுமாா், பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்த வழங்கிய ஆட்டு கிடாக்களை பலியிட்டு, ஆடுகளின் ரத்தத்தைக் குடித்தாா். நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு இசை நிகழ்ச்சியுடனும் விழா நிறைவடைந்தது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் கே. விக்னேஸ்வரன், துணைத் தலைவா் ஓ. அமா்நாத், செயலா் எஸ். தனா சதீஷ், துணைச் செயலா் ஏபி. குட்டி, பொருளாளா் எம். சிவ ராஜேஷ், துணைப் பொருளாளா், எம். மோகன்ராஜ் மற்றும் தன்னாா்வலா்கள், இளைஞா்கள் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com