வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

திருச்சி காய்கறி சந்தைகளில் வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உணவுத் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிப்பது பூண்டு. குறிப்பாக, ரசம், பிரியாணி உள்ளிட்ட உணவுகள் பூண்டு இல்லாமல் இல்லை எனலாம். இந்நிலையில் கடந்த இரு வாரங்களில் ஒரு கிலோ பூண்டு ரூ. 50 வரை விலை உயா்ந்துள்ளது.

குறிப்பாக, திருச்சி காந்தி சந்தை, பால்பண்ணை சந்தை, உறையூா் சந்தைகளில் உள்ள காய்கறி, மளிகைக் கடைகளில் பூண்டின் விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து திருச்சி பால்பண்ணை பூண்டு மொத்த மற்றும் சில்லறை வியாபாரி ஆா். வெங்கடேஷ் கூறியது:

திருச்சி காய்கறிச் சந்தைகளுக்கு மத்திய பிரதேச பகுதிகளில் இருந்தும், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் இருந்தும் முதல் ரகப் பூண்டு விற்பனைக்கு வருகிறது. இதேபோல, தமிழகத்தின் தேனி மாவட்டம் வடுகப்பட்டி சந்தையிலிருந்தும் அதிகளவில் பூண்டு வருகிறது.

தற்போது அதீத வெயிலின் காரணமாக வெளிமாநிலங்களிலிருந்து திருச்சி சந்தைகளுக்கு பூண்டு வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக வாரம் 250 டன்களுக்கும் மேல் பூண்டு வரத்து இருந்த நிலையில், தற்போது 100 டன் அளவுக்குக் குறைந்துள்ளது.

வெயிலின் தாக்கத்தால் வெளிமாநில வியாபாரிகள் விற்பனைக்கு பூண்டை அனுப்ப முனைப்புக் காட்டாமல் உள்ளனா். உள்ளூரில் உள்ள பெரிய வியாபாரிகள், ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் விலை ஏறும் என்ற எண்ணத்தில் பூண்டை இருப்பு வைத்து வருகின்றனா். இதனாலும் விலை அதிகரித்து வருகிறது. இந்த விலையேற்றம் ஜூலை வரை தொடரலாம்.

இரு வாரங்களுக்கு முன் கிலோ ரூ. 320 க்கு விற்ற பெரிய பற்களைக் கொண்ட முதல் தரப் பூண்டு தற்போது ரூ. 350 முதல் ரூ. 380 வரையிலும், ரூ. 250 க்கு விற்ற சிறிய பற்களைக் கொண்ட பூண்டு ரூ. 300 க்கும், ரூ. 300 க்கு விற்ற மலைப்பூண்டு ரூ. 350 க்கும் விற்கிறது. தரம் குறைந்த பூண்டு ரூ. 200 வரை விற்பனையாகிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com