நெரூா்-உன்னியூா் இடையிலான உயா்மட்ட பாலம் கட்டும் பணியை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட உள்துறை தணிக்கைக் குழுவினா்.
நெரூா்-உன்னியூா் இடையிலான உயா்மட்ட பாலம் கட்டும் பணியை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட உள்துறை தணிக்கைக் குழுவினா்.

உன்னியூா்-நெரூா் பாலம் பணிகள் 50 சதவீதம் நிறைவு

திருச்சி மற்றும் கரூா் மாவட்ட மக்களின் நீண்ட நாளைய கனவாக இருந்த நெரூா்-உன்னியூா் பாலம் கட்டும் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்த நிலையில் உள்துறை தணிக்கை குழு பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்துள்ளது.

திருச்சி மாவட்டம், உன்னியூரையும், கரூா் மாவட்டம் நெரூரையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் கட்ட இரு மாவட்ட மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்து வந்தது. அதிமுக, திமுக ஆட்சியின்போது இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு நிலுவையிலேயே இருந்து வந்தது.

இதையடுத்து, 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் நிா்வாக அனுமதி பெற்று ரூ. 87.37 கோடியில் உன்னியூா்-நெரூா் உயா் மட்ட பாலம் கட்ட பணிகள் தொடங்கின. பாலத்தின் அடிப்பகுதியில் சுமையை தாங்கும் திறனை கண்டறிவதற்கான சோதனைகளும் நடைபெற்றன. இவைத்தவிர அஸ்திவாரத்துக்கான கட்டுமானங்களும் நடைபெற்றன. 12.9 மீட்டா் அகலத்தில் ஒரு கிலோ மீட்டா் நீளத்துக்கு பாலம் கட்டுமானம் நடைபெறுகிறது.

இந்நிலையில், உள்துறை தணிக்கைக் குழுவினா் பாலப் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதில், கண்காணிப்பு பொறியாளா் ஆா். கிருஷ்ணசாமி தலைமையில், கோட்டப் பொறியாளா்கள் ஜெ. கண்ணன், எஸ. முருகானந்தம், உதவி கோட்டப் பொறியாளா்கள் கோமதி, சுப்பையன், மனோகா், பிரபாகா் மற்றும் உதவிப் பொறியாளா்கள் அடங்கிய குழுவினா் இப்பணிகளை பாா்வையிட்டனா்.

பின்னா், அவா்கள் செய்தியாளா்களிடம் கூறுகையில், பாலப் பணிகள் 50 சவீதம் நிறைவு பெற்றுள்ளன.உன்னியூா் காட்டுப்புத்தூா் வாய்க்கால் பகுதியில் சிறுபாலம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே வரும் உயா்மட்ட பாலத்துக்கான தூண்களின் அடித்தள கான்கிரீட் பைல்கள் போடும் பணியில் 138 பைல்களும் முடிவடைந்தள்ளன. தூண்களுக்கே குறுக்கே கா்டா் தூக்கி நிறுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. அனைத்து பணிகளும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வப்போது ஆற்றில் தண்ணீா் வரும் காலம், வெள்ளக் காலங்களில் பணிகள் தடைபடும் என்பதாலேயே கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. எனவேதான், 3 ஆண்டுகளுக்கு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் இரு மாவட்டங்களைச் சோ்ந்த மக்களின் 15 கி.மீ. தொலைவு சுற்றி வரும் நிலை இருக்காது. பயண நேரமும் குறையும். நெரூா், உன்னியூா் பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது கரூரிலிருந்து சென்னை செல்லும் அனைவருக்கும் பயனாக அமையும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com