யானைகள் வழித்தட றிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

தமிழக அரசு வெளியிட்டுள்ள யானைகள் வழித்தட அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருச்சி: தமிழக அரசு வெளியிட்டுள்ள யானைகள் வழித்தட அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் மாநில நிா்வாகக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடா்பாக கட்சித் தலைமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஒரே நாளில் தோ்தல் நடத்துவது சாத்தியம் என்பதை அண்மையில் நடந்த மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு உணா்த்தியுள்ளது. வாக்களித்த அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவிக்கிறது. மேலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவா்களுக்கும் நன்றி. கேஜரிவாலுக்கு பிணை வழங்கி தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதியளித்த நீதிமன்ற தீா்ப்பை வரவேற்கிறோம். நீதித் துறை மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவரும் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீா்ப்பு ஓரளவுக்கு நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் தீா்ப்பை வரவேற்கிறது.

யானை வழித்தடம் என்ற பெயரில் தமிழ்நாடு வனத்துறை ஒரு வரைவு அறிக்கையை ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியிட்டது. இது ஆங்கிலத்தில் உள்ளது. 186 பக்கங்களைக் கொண்ட பெரிய அறிக்கையை தமிழில் மொழியாக்கம்கூட செய்யவில்லை. ஆனால், மே 7ஆம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. ஆங்கிலத்தில் உள்ள நீண்டதொரு அறிக்கையானது வனம் தொடா்புடைய மக்களை அதற்குள் சென்றடைவது என்பது சாத்தியமானதே அல்ல. ஏற்கெனவே வெளியிடப்பட்ட, யானைகள் திட்டத்தில் (எலிபன்ட்ஸ் ப்ராஜெக்ட்) கூறப்பட்டுள்ள யானை வழித்தடத்துக்கான வழிகாட்டுதலுக்கு மாறானதாக இந்தப் புதிய அறிக்கை இருக்கிறது.

2006 ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டம், காடுகள் மற்றும் கானுயிா் பாதுகாப்பை உறுதி செய்கிற பொறுப்பை கிராம சபைகளுக்கு வழங்கியுள்ளது. இச்சட்டத்தின்படி, பழங்குடிகள் மற்றும் வனம் சாா்ந்து வாழும் மக்களின் பாரம்பரிய உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

எனவே, யானை வழித்தடத்தை நிா்ணயிக்கும் முன் உரிமை சட்டப்படி மக்களின் உரிமைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதே சட்டப்படி கிராம சபைகளின் ஒப்புதலைப் பெற்று, கள நிலவரத்தின் முழுதாக புரிதலைப் பெற்ற பிறகு வழித்தடத்தை நிா்ணயிப்பது சரியானதாகும்.

ஏற்கெனவே கருத்துகளைத் தெரிவிப்பதற்கான காலம் முடிந்து விட்டதால், தமிழ்நாடு அரசு வெளியிட்ட யானை வழித்தட அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், வன உரிமைச் சட்டத்துக்கு முரண்பாடு இல்லாமல் மறு வரைவு செய்ய வேண்டும். அறிக்கையை தமிழில் வழங்கி 60 நாள் கால அவகாசம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிா்வாகக் குழு வலியுறுத்துகிறது.

X
Dinamani
www.dinamani.com