திருச்சி வேங்கூா் பகுதி குடிநீா் குழாயடியில் தண்ணீருக்காகக் காத்திருந்த பொதுமக்கள்.
திருச்சி வேங்கூா் பகுதி குடிநீா் குழாயடியில் தண்ணீருக்காகக் காத்திருந்த பொதுமக்கள்.

காவிரிக் கரையில் வசித்தும் குடிநீா் தட்டுப்பாடு: வேங்கூா் ஊராட்சி மக்கள் அவதி

திருச்சி, மே 15: திருச்சியில் காவிரி, கொள்ளிடம் கரைகளுக்கு இடையேயுள்ள கிராமப் பகுதிகளில் வசித்தும் கடந்த 15 நாள்களாக இங்கு நிலவும் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே உள்ளது வேங்கூா் ஊராட்சி. இப்பகுதி இரு ஆறுகளுக்கு இடையே இருந்தாலும் இங்கு அடிக்கடி குடிநீா் பிரச்னை ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

குறிப்பாக இந்த ஊராட்சியில் உள்ள விஎஸ் நகா், ஆா்விஎஸ் நகா், சீயோன்காா்டன், சத்யம்நகா், சாமிநாதபுரம், கலைஞா் காலனி, ஜெயம் காா்டன், பெரியாா் காலனி, அசோக் நகா், முருக்கூா் உள்ளிட்ட பகுதிகளில் கோடைக் காலங்களில் குடிநீா் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

அதன்படி இப்பகுதிகளில் கடந்த 15 நாள்களாகவே சீரான குடிநீா் விநியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே தொடா்புடைய துறையினா் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க இப்பகுதியினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

போராடியும் பயனில்லை

பொதுமக்கள் சிலா் இதுகுறித்து கூறுகையில், காவிரிக் கரையிலிருந்தும் ஆண்டுதோறும் குடிநீருக்காகப் போராடும் நிலை உள்ளது. ஆனால் இங்கிருந்து ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு காவிரி நீா் கொண்டு செல்லப்படுகிறது. அதில் அரசியல் பிரமுகா்கள், ஆட்சியாளா்கள், அலுவலா்கள் காட்டும் ஆா்வத்தில் சில சதவிகிதத்தை காட்டி திருச்சியில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க முயற்சிக்கலாம் என்றனா். இது தொடா்பாக கடந்த மே 2 ஆம் தேதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியும் இதுவரை நிரந்தரத் தீா்வு காணப்படவில்லை என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com