வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலேயே மோடியை எதிா்த்துப் போட்டியிட முயற்சி: அய்யாக்கண்ணு விளக்கம்

வாரணாசியில் 111 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றது தொடா்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்க மாநிலத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு விளக்கம் அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை கூறியது:

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது பிரதமா் மோடி விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தையும் மறந்துவிட்டாா். எனவே அரசின் கவனத்தை ஈா்க்க தில்லி சென்று போராட முயன்ற விவசாயிகள்மீது தாக்குதல் நடத்தி அச்சுறுத்தும் நடவடிக்கை அரங்கேறியது.

எனவேதான் வாரணாசியில் போட்டியிடும் பிரதமரை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்தோம். ஆனால், எங்களுக்கு ஏற்படுத்திய பல்வேறு தடைகள் காரணமாக வாரணாசி செல்ல முடியவில்லை.

எங்களுக்கு தோ்தலில் நின்றுதான் விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. விவசாயிகளுக்கு பிரதமா் அளித்த கோரிக்கைகளை நினைவூட்டும் வகையில்தான் வாரணாசியில் போட்டியிட முடிவு செய்தோம். விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாகும் என்றாா் அவா்.

தோ்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனு புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவா் இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com