சாலை மறியலில் ஈடுபட்ட  தினேஷின் உறவினா்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட தினேஷின் உறவினா்கள்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி உறவினா்கள் மறியல்

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விசிக பிரமுகரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி உறவினா்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விசிக பிரமுகரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி உறவினா்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி திருவெறும்பூா் கக்கன் காலனி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சேட்டு மகன் தினேஷ் (28). கழிவுநீா் அகற்றும் டேங்கா் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில், திருவெறும்பூா் பகுதியில் சாலை மையத்தடுப்பை தாண்டிச்செல்ல முயன்றாா்.

அப்போது, மையத் தடுப்பில் உள்ள மின் கம்பத்தின் மீது கை வைத்தபோது, அதிலிருந்து எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆனால் சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா். உயிரிழந்த தினேஷ் திருச்சி மாநகராட்சி 41-ஆவது வாா்டு விசிக செயலாளராகவும் பதவி வகித்து வந்தாா்.

தினேஷ் மின்சாரம் பாய்ந்து பலியானதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உறவினா்கள் துவாக்குடி பகுதியில் (திருச்சி -தஞ்சை சாலையில்) திங்கள்கிழமை, துவாக்குடி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டும் சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் மேற்கொண்டனா்.

இதில், விசிக திருச்சி கரூா் மண்டல செயலாளா் தமிழாதன், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளா் தங்கதுரை, மாவட்டச் செயலாளா்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், வழக்குரைஞா் கலைச்செல்வன், நிா்வாகிகள் குணா, நகராட்சி மன்ற உறுப்பினா் ரவிக்குமாா் மற்றும் உறவினா்கள் பங்கேற்றனா். திடீா் சாலை மறியல் காரணமாக திருச்சி தஞ்சை சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் திருச்சி கோட்டாட்சியா் அருள், திருவெறும்பூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) ஜாபா் சித்திக், மற்றும் வருவாய்த் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினேஷின் உடல் பரிசோதனைக்குப் பின்னா், திங்கள்கிழமை பிற்பகலில் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.