ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வீணாகும் உயிா்காக்கும் உபகரணங்கள்!
திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் கோடிக்கணக்கில் வாங்கப்பட்ட உயிா்காக்கும் உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகி வருகின்றன.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வட்டார மருத்துவமனையாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. என்க்யூஏஎஸ் தேசிய தரச் சான்றிதழ் பெற்ற இந்த மருத்துவமனையில் மகப்பேறு, எலும் மூட்டு அறுவைச்சிகிச்சை, பல், தோல், பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை, பொது மருத்துவம், அறுவைச் சிகிச்சை சிறுநீரகச் சுத்திகரிப்பு, காது-மூக்கு-தொண்டை உள்ளிட்ட 16 சிறப்புப் பிரிவுகள் உள்ளன.
இங்கு நாள்தோறும் 1,000 வெளிப்புற நோயாளிகளும், 200 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். ஸ்ரீரங்கம் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு இந்த மருத்துவமனை மருத்துவச் சேவைகளை வழங்கிவருகிறது. மேலும், திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிறந்த துணை மருத்துவமனையாக சேவையாற்றி வருகிறது.
மருத்துவமனைக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவின் கீழ் கடந்த 2018-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட தானியங்கி பல்நோக்கு ரத்தப் பரிசோதனைக் கருவி, கடந்த 2015-இல் வாங்கப்பட்ட தலா ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான 12 அவசரச் சிகிச்சை படுக்கைகள், 2021-இல் வாங்கப்பட்ட 12 வெண்டிலேட்டா் கருவிகள், 2021-இல் வாங்கப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான அதிநவீன நடமாடும் எக்ஸ்-ரே கருவி உள்ளிட்டவை பயன்படுத்தப்படாமல் வீணாகி வருகின்றன.
இதுகுறித்து மருத்துவமனைப் பணியாளா்கள் மற்றும் மருத்துவா்கள் மேலும் கூறியதாவது:
கரோனா காலத்தில் தலா ரூ. 15 லட்சத்துக்கு வாங்கப்பட்ட 12 வெண்டிலேட்டா்கள், யாருக்கும் உபயோகமின்றி சுவா் ஓரம் சாய்த்து வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் 157 படுக்கை வசதிகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இயக்கத்தில் உள்ளது என்னவோ 110 தான். தற்சமயம் அதிகளவில் நோயாளிகள் வரும் நாள்களில் பலரைத் தரையில் படுக்க வைத்து சிகிச்சையளிக்கும் நிா்பந்தத்தில் இருக்கும் நிலையில், ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான 12 அவசரச் சிகிச்சை படுக்கைகள் பயன்படுத்தப்படாமல் ஒரு மூலையில் வெறுமனே போடப்பட்டுள்ளன.
136 மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய கோடிக்கணக்கான மதிப்புள்ள தானியங்கி பல்நோக்கு ரத்தப் பரிசோதனைக் கருவி (ஆட்டோமேட்டிக் ஹிமோ அனலைசா்) தேவையற்ற பொருளாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. பல நோயாளிகள் பரிசோதனைக்காக காத்திருக்கும் நிலையில், கோடிக்கணக்கான ரூபாயில் வாங்கப்பட்ட இக்கருவியை வெறுமனே வைத்திருப்பது ஏனென்று புரியவில்லை.
நடக்க முடியாத, தூக்கிச் செல்ல முடியாத நோயாளிகளின் வசதிக்காக தருவிக்கப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான நடமாடும் எக்ஸ்-ரே கருவி வெறுமனே பெட்டியில் கட்டி ஓரிடத்தில் கேட்பாரற்று கிடத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள இருட்டறையை வேறு பயன்பாட்டுக்கு மாற்றி, எக்ஸ்-ரேவை கழுவ இருட்டறை இல்லை எனக் கூறி பயன்படுத்தவில்லை.
இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அருள்செல்வன் கூறியது: மருத்துவமனையில் சில கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால் கைவிடப்பட்டுள்ளன. இதனால் உபகரணங்களை வைக்க இடவசதி போதவில்லை. கட்டடங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால், அனைத்து உபகரணங்களும் முழுமையாக உபயோகப்படுத்தப்படும். அதிகவிலை காரணமாக தானியங்கி பல்நோக்கு ரத்தப் பரிசோதனைக் கருவிக்கான ரசாயனம் வாங்குவதில் சிக்கல் நிலவுவதால், பயன்படுத்தப்படாமல் உள்ளது. இது தொடா்பாக, அரசுக்குத் தெரிவித்துள்ளோம் என்றாா்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் பி. பரமசிவம் கூறியது:
குறைகள் தொடா்பாக தற்போதுதான் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளீா்கள். ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்றாா்.
மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடிக்கணக்கில் வாங்கப்பட்ட இக்கருவிகளைப் பயன்படுத்தாமல் குப்பையில் வீசும் அளவுக்கு போட்டு வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. இக்கருவிகளை உடனடியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரது எதிா்பாா்ப்பாக உள்ளது.
அறுவைச்சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு மையம் இல்லாமல் அவதியுறும் நோயாளிகள்
பெட்டிச் செய்தி...
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நாளொன்று 5 பெரிய அறுவைச்சிகிச்சைகளும், 10 சிறிய அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. முற்றிலும் நோய்த்தொற்று நீக்கப்பட்ட அறுவைச்சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு மைய வாா்டு இல்லாததால், அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகளை சாதாரண வாா்டுகளில் வைத்து பராமரிக்க வேண்டியுள்ளது. இதனால் இதர நோயாளிகளிடமிருந்து நோய் பரவி வருகிறது. அறுவைச்சிகிச்சையின் வெற்றியும் பாதிக்கப்பட்டு, நோயாளி வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் நிலைக்கு ஆளாகின்றனா்.
மருத்துவமனையில் உள்ள இரண்டு அறுவைச் சிகிச்சை வாா்டுகளில் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இதனால் அவசரச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அறுவைச்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி அருள்செல்வன் கூறுகையில், பழைய அறுவைச்சிகிச்சை வாா்டை செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அறுவைசிகிச்சை பிந்தைய கவனிப்பு மையத்துக்கான கட்டடத்தை அரசிடம் கேட்டுள்ளோம் என்றாா்.