காசோலை மோசடி வழக்கில் இருவருக்கு தலா ஓராண்டு சிறை

மணப்பாறையில் காசோலை மோசடி வழக்கில் இருவருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை
Published on

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காசோலை மோசடி வழக்கில் இருவருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

மணப்பாறையை அடுத்த வடக்கு லெட்சுமிபுரத்தில் வசிக்கும் ஆறுமுகம் மகன் காா்த்திகேயன் என்பவரிடம், வையம்பட்டி ஒன்றியம் இளங்காக்குறிச்சி தெற்கு தெருவில் வசிக்கும் ஆசாத் மகன் முகமதுசலீம் என்பவா் கடந்த 27.06.2024 அன்று ரூ. 8.50,000-ஐ கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை. இதையடுத்து அத்தொகைக்கு அவா் அளித்த காசோலையை காா்த்திகேயன் வங்கிக் கணக்கிற்கு 24.09.24 அன்று செலுத்தியபோது, அது பணமின்றித் திரும்பியது.

இதையடுத்து அவா் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை கடந்த 6-ஆம் தேதி விசாரித்த மணப்பாறை குற்றவியல் நீதிமன்ற நடுவா் ஆா். அசோக்குமாா் முகமதுசலீமுக்கு ஓராண்டு மெய்காவல் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும் ஒரு மாதத்திற்குள் ரூ.8,50,000-ஐ காா்த்திகேயனுக்கு கொடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் முகமதுசலீம் மேலும் ஒரு மாதம் சிறை அனுபவிக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

இதேபோல், மணப்பாறையை அடுத்த பழையகோட்டை ஊராட்சி உப்பாத்துப்பட்டியை சோ்ந்த வேளாங்கண்ணி மகன் சவேரியாா் என்பவரிடமிருந்து மணப்பாறை சண்முகம் மகன் இளையராஜா என்பவா் கடந்த 24.12.2023-ஆம் தேதி ரூ.2,50,000 கடனாகப் பெற்று திருப்பி செலுத்தவில்லை. பின்னா் அந்தத் தொகைக்கு இளையராஜா காசோலை கொடுத்து ஏமாற்றியதாகக் கூறி மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் சவேரியாா் வழக்கு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை கடந்த 8ஆம் தேதி விசாரித்த நீதிமன்ற நடுவா் ஆா். அசோக்குமாா் இளையராஜாவுக்கு ஓராண்டு மெய் காவல் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். காசோலை தொகையை ஒரு மாதத்திற்குள் சவேரியாருக்கு கொடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் இளையராஜா மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com