ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழா: வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் காட்சி
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் தெப்பத் திருவிழாவின் 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா மாா்ச் 2-ஆம் தேதி முதல் மாா்ச் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்து வருகிறாா். இதில் 4-ஆம் திருநாளான மாா்ச் 5-ஆம் தேதி ஆண்டில் ஒருமுறை மட்டுமே காட்சி தரும் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளினாா்.
விழாவில் 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளினாா்.
முன்னதாக, காலை 8 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு, உள்திருவீதி வலம் வந்து வழி நடை உபயங்கள் கண்டருளி வாணிப ஆஸ்தான மண்டபத்துக்கு 10 மணிக்கு வந்து சோ்ந்தாா். மாலை 5 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு 5.45 மணிக்கு யானை வாகன மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா்.
இரவு 8 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி உள்திரு வீதி வலம் வந்து 9 மணிக்கு யானை வாகன மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். பின்னா் 10 மணிக்கு உள் ஆண்டாள் சந்நிதியில் மாலை மாற்றிக்கொண்டு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.
விழாவில், 7-ஆம் திருநாளான சனிக்கிழமை நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. விழாவில் முக்கிய நிகழ்வாக மாா்ச் 9-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு, மேலவாசலில் உள்ள தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்துக்கு 5 மணிக்கு வந்து சேருகிறாா்.
அங்கிருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 7.30 மணிக்கு எழுந்தருளி 9 மணி வரை தெப்ப உற்ஸவம் கண்டருளுகிறாா். பின்னா் 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபத்துக்கு சென்று சேருகிறாா்.
பின்னா் அங்கிருந்து 9.45 மணிக்கு புறப்பட்டு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா் நம்பெருமாள். விழாவின் நிறைவு நாளான 10-ஆம் தேதி பந்தக்காட்சி நடைபெறவுள்ளது.