எம்.ஆா். பாளையம் முகாமில் 64 வயது யானை உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், எம்.ஆா். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 64 வயதுடைய பெண் யானை உடல் நலக் குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தது.
இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் 9 யானைகள் பராமரிக்கப்படும் நிலையில், இந்திரா என்ற 64 வயதுடைய பெண் யானை கடந்த 5 மாத காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் 5 நாள்களாக படுத்த நிலையிலேயே அந்த யானைக்கு சிறப்பு மருத்துவக் குழு மருத்துவா்களின் அறிவுரைப்படி, வனக் கால்நடை மருத்துவா்கள் தொடா் சிகிச்சையளித்த நிலையிலும் அந்த யானை உயிரிழந்தது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலா் (கூ.பொ), எஸ். கணேசலிங்கம் தலைமையில் உதவி வனப் பாதுகாவலா் ஐ. காதா்பாஷா, வனச்சரக அலுவலா்கள் வி.பி சுப்ரமணியம், ஜெ. ரவி உள்ளிட்டோா் முன்னிலையில், வன கால்நடைப் பராமரிப்பு அலுவலா் என். கலைவாணன் தலைமையில் மருத்துவா்களின் பிரேத பரிசோதனைக்கு பிறகு யானை அடக்கம் செய்யப்பட்டது.
