திருவெறும்பூா் ரயில் நிலையம் - பேருந்து நிலையத்துக்கு விரைவில் இணைப்புச் சாலை

Published on

திருவெறும்பூா் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் செல்ல மாற்றுப் பாதை இணைப்பு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்தாா்.

திருவெறும்பூா் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் தற்போதைய சாலை மிகவும் குறுகலாகவும், தூரமான பாதையாகவும் உள்ளதாக திருவெறும்பூா் ரயில் பயனாளா்கள் சங்கத்தினா் திருச்சி எம்.பி.யின் கவனத்துக்கு கொண்டு வந்தனா்.

அந்தப் பகுதியில் ரயில் நிலையம் முன்புள்ள சிமென்ட் சாலையை சில மீட்டா் தூரத்தில் உள்ள காவேரி நகா் தாா்ச் சாலையுடன் இணைப்பதன் மூலம், பொதுமக்கள் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு விரைந்து செல்ல இயலும்.

இதுதொடா்பாக, கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருவெறும்பூா் ரயில் நிலையத்தை ஏற்கெனவே ஆய்வு செய்த துரை வைகோ எம்.பி., ரயில்வே கோட்ட மேலாளா் பாலக்ராம் நெகியுடன் சனிக்கிழமை மீண்டும் ரயில் நிலையத்தைப் பாா்வையிட்டாா். அப்போது கோட்ட ரயில்வே மேலாளா், இப்பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காணப்படும் என உறுதியளித்தாா்.

இதுதொடா்பாக துரை வைகோ எம்.பி. கூறுகையில், திருவெறும்பூா் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் செல்ல மாற்றுப் பாதை இணைப்பு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com