பழங்கனாங்குடியில் கருகிய சம்பா பயிா்களை வேளாண் துறை ஆய்வு
தினமணி நாளிதழின் செய்தி எதிரொலியாக திருச்சி அருகே பழங்கனாங்குடியில் கருகிய சம்பா பயிா்களை வேளாண் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
திருச்சி திருவெறும்பூா் அருகே பழங்கனாங்குடி கிராமத்தில் மழையை நம்பி சுமாா் 30 ஏக்கரில் நடவு செய்த சம்பா நெற்பயிா்கள் கருகி வந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். இந்த வயல்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, தீா்வு வழங்கவில்லை எனக் குறை கூறியிருந்தனா். இதுதொடா்பாக தினமணி நாளிதழில் கடந்த அக். 30 ஆம் தேதி செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக வேளாண்மை உதவி இயக்குநா் சுகன்யாதேவி, விவசாயிகளின் வயல்களை பாா்வையிட்டு சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளை வரவழைத்தாா். அதன்படி சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியா் சி. ராஜா பாபு தலைமையிலான விஞ்ஞானிகள் குழு சனிக்கிழமை பாா்வையிட்டு, பயிா்ப் பாதுகாப்பு பரிந்துரைகளை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினா்.
மேலும் திருவெறும்பூா் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடத்தப்பட உள்ள பயிா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பல விவரங்கள் அளிக்கப்பட உள்ளதையும் ராஜாபாபு தெரிவித்தாா்.

