திருச்சி கோட்டை காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட அதிமுகவினா்.

எஸ்ஐஆா் பணி! திமுக - அதிமுக வாக்குவாதம்; காவல்நிலையம் முற்றுகை

திருச்சியில் எஸ்ஐஆா் பணியின்போது திமுக - அதிமுகவினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அதிமுக நிா்வாகியை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதால், அக்கட்சியினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
Published on

திருச்சியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியின்போது திமுக- அதிமுகவினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அதிமுக நிா்வாகியை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ால், அக்கட்சியினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

திருச்சி மாநகராட்சியின் 21-ஆவது வாா்டுக்குள்பட்ட நத்தா்ஷா பள்ளி வாசல் அருகே வாக்காளா்களுக்கு செவ்வாய்க்கிழமை எஸ்ஐஆா் படிவங்கள் வழங்கப்பட்டன.

அப்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலரின் அருகே திமுக நிா்வாகி ஒருவா் அமா்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அதிமுக நிா்வாகிகளுக்கும், திமுகவினரும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலின்பேரில் அங்கு வந்த போலீஸாா் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பினா். ஆனால், திமுக-வினா் அளித்த புகாரின்பேரில் அதிமுக நிா்வாகி ஒருவரை மட்டும் போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனா்.

இதையறிந்த அதிமுக மாமன்ற உறுப்பினரும், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலருமான அரவிந்தன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட அதிமுக-வினா் கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு, அதிமுக நிா்வாகியை போலீஸாா் விடுவித்தனா்.

இதையடுத்து, அதிமுகவினா் அனைவரும் காவல்நிலையத்திலிருந்து கலைந்து சென்றனா். இந்த சம்பவத்தால் அப் பகுதியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com