"1,800 மாணவர்களுக்கு விரைவில் கல்விக்கடன்'
By dn | Published on : 01st August 2013 02:47 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்டத்தில் 1,800 மாணவர்களுக்கு விரைவில் கல்விக்கடன் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் எம். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாமில், 791 பயனாளிகளுக்கு ரூ. 12 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர் மேலும் பேசியது: மாவட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஏழை மாணவர்கள் 451 பேருக்கு வேலைவாய்ப்பும், கல்விக்கடன் முகாமில் 450 பேருக்கு கல்விக்கடனும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1,800 பேருக்கு விரைவில் கல்விக்கடன் வழங்கப்பட உள்ளது. விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 160 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை, 60 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை, 6 வயதுடைய 20 குழந்தைகளுக்கு காது கேட்பதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த்துறை மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க சிறப்பு முகாம் விரைவில் நடைபெற உள்ளது. இதில் அரசு விதியின் கீழ், பட்டா வழங்க முடியாத பகுதிகளும் ஆய்வு செய்து தகுதியுடைய நபர்களுக்கு பட்டா வழங்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார். இந்நிகழ்ச்சியில், அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. மணிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் அ. கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர் கணபதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஜீனத்பானு, வட்டாட்சியர்கள் முருகன், தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.