சுடச்சுட

  

  வேளாண் இயந்திரங்கள் வழங்க ரூ. 55.50 லட்சம் மானியம்

  By  அரியலூர்  |   Published on : 02nd January 2013 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில் 2012- 13-ம் ஆண்டுக்கு விவசாயிகளுக்கு 222 இயந்திரங்கள், கருவிகளை வழங்க தமிழக அரசு ரூ. 55.50 லட்சம் மானியத்தை ஒதுக்கியுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார்.
   அரியலூரில் வேளாண் பொறியியல் துறை சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 19 பேருக்கு ரூ. 24,86,950 மதிப்பில் 20 வேளாண் இயந்திரங்கள், கருவிகளை திங்கள்கிழமை வழங்கிய அவர் மேலும் பேசியது:
   வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உழவுக் கருவிகள், கதிரடிக்கும் இயந்திரங்கள், களையெடுக்கும் கருவிகள், நாற்று நடும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு கருவிகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
   ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 60 சத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 50 சத மானியத்திலும் இந்தக் கருவிகள் வழங்கப்பட உள்ளன.
   இதற்காக தமிழக அரசு, 2012-13-ம் ஆண்டிற்கு அரியலூர் மாவட்டத்திற்கு 222 இயந்திரங்கள், கருவிகள் வழங்க ரூ. 55.50 லட்சம் மானியத்தை ஒதுக்கியுள்ளது.
   முதல் கட்டமாக 12 பேருக்கு பவர் டில்லர் இயந்திரங்கள், ஒருவருக்கு நாற்றுநடும் இயந்திரம், 3 பேருக்கு சுழற் கலப்பைகள், ஒருவருக்கு களையெடுக்கும் கருவி, 2 பேருக்கு மரம் அறுக்கும் கருவி என 19 பேருக்கு 20 கருவிகள் ரூ. 8,66,010 மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
   மானியம் தவிர மீதித் தொகையை விவசாயிகள் சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு வங்கி வரைவோலையாகச் செலுத்த வேண்டும்.
   மேலும், இத்திட்டத்தின் மூலம் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் பெற விருப்பமுள்ள உடையார்பாளையம் கோட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்), ஜோதிபுரம், சிதம்பரம் சாலை, ஜயங்கொண்டம் அலுவலகத்தையும், அரியலூர் வருவாய்க் கோட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், பண்டகச்சாலை வளாகம், ஜயங்கொண்டம் சாலை, அரியலூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
   நிகழ்ச்சியில் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மணி, உதவி செயற்பொறியாளர்கள் அண்ணாதுரை, மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai