சுடச்சுட

  

  அரியலூர் மாவட்ட கிராமப் பகுதிகளில் பொது மருத்துவ முகாம்

  By  ஜயங்கொண்டம்  |   Published on : 07th January 2013 10:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் பொது மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
   ஜயங்கொண்டம் நகராட்சி சார்பில் சிறப்பு பொது மருத்துவ முகாம் ஜயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு நகர்மன்ற தலைவர் மீனாள் சந்திரசேகர் தலைமை வகித்தார்.
   மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார் முகாமில் பங்கேற்று ரூ. 4 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் நகர்ப்புற சுய உதவித்திட்டம், மற்றும் சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் வழங்கி பேசியது:
   இது போன்ற பொது மருத்துவ முகாம் ஜயங்கொண்டம் நகராட்சியைத் தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கிராமங்களிலும் நடத்தப்படும். அரியலூர் மாவட்டத்தில் 30 சதவிகித பெண்களுக்கு ரத்த சோகை நோய் உள்ளது. மகளிருக்கு மட்டுமல்லாமல் பள்ளிக் குழந்தைகள் முதல் முறையாக பரிசோதனை செய்வதன் மூலம் ரத்தசோகை நோய் இல்லாத மாவட்டமாக அரியலூரை மாற்றலாம். தாய்மார்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க முடியும் என்றார்.
   இம்முகாமில் 968 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 28 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். உடையார்பாளையம் கோட்டாட்சியர் கஸ்தூரி, நகர்மன்ற துணைத்தலைவர் பி.ஆர். செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   முகாமில் வட்டார தலைமை மருத்துவர் விஜயபாஸ்கர் தலைமையில் மருத்துவர்கள் செல்வமணி, ராதிகா உள்ளிட்ட 13 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் பங்கேற்று சிகிச்சையளித்தனர்.
   இந்நிகழ்ச்சியில் ஜயங்கொண்டம் வட்டாட்சியர் சீனிவாசன், ஜயங்கொண்டம் கனரா வங்கி கிளை மேலாளர் கே. பிச்சை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   முன்னதாக, நகர்மன்ற ஆணையர் கார்த்திகேயன் வரவேற்றார். வட்டார தலைமை மருத்துவர் விஜயபாஸ்கர் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai