அனல் மின் திட்டத்தை தொடங்க வலியுறுத்தல்
By அரியலூர் | Published on : 09th January 2013 09:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஜயங்கொண்டம் அனல் மின் திட்டத்தைத் தொடங்க தமிழக அரசு உரிய
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்டப் பொருளாளர் இலக்கியதாசன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலர்கள்
மதி, லோகநாதன், பொன்.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி அனல் மின்
திட்டப் பணிகளை தொடங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது. உடையார்பாளையம்
பகுதியில் உள்ள பொன்னாறு, கொள்ளிட ஆறு, பொன்னேரி பாசனம், ராசா வாய்க்கால் பாசனம்
ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களை டெல்டா பகுதியாக அறிவித்து, மும்முனை மின்சாரம்,
இதர நிவாரணங்களை வழங்க வேண்டும்.
ஆண்டிமடம் ஒன்றியத்தில் முந்திரித் தொழிற்சாலை அமைத்து, அங்குள்ள நெசவுத்
தொழிலாளர்களை கூட்டுறவு ஒன்றியத்தில் இணைத்து நிவாரணம் வழங்க வேண்டும். திருமானூர்
ஒன்றியத்தில் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள பாசனக் கால்வாய்களைத் தூர்வார வேண்டும்.
மக்களவை உறுப்பினர் நிதியிலிருந்து அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்
கூடங்களை முறையாகப் பராமரித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கும்பகோணம் -
ஜயங்கொண்டம் - செந்துறை வழியாக விருத்தாசலம் செல்லும் புதிய இருப்பு பாதையை அமைக்க
வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை திருத்தி ஜாதி, மதமற்ற சமுதாயத்தை
உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணைச் செயலர் செல்வநம்பி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்டச்
செயலர் அன்பானந்தம், நிர்வாகிகள் மாறன், திருமாறன், கருப்புசாமி, ஜெயக்குமார்,
வீரவளவன், தமிழ்முரசு, கந்தன், பரணிதரன், சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றியச் செயலர் ராஜேந்திரன் வரவேற்றார். நகரச் செயலர் கல்யாணசுந்தரம் நன்றி
கூறினார்.