சுடச்சுட

  

  அரியலூர் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகேயுள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவல் துறை சார்பில் 24-வது சாலைப் பாதுகாப்பு வார நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
   தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார் பேசியது:
   வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு வழிமுறைகள், உத்தரவு சின்னங்கள், எச்சரிக்கை சின்னங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜன. 1 முதல் 7-ம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. பாதசாரிகள் சாலைகளின் குறுக்கே கடக்கும்போது இருபுறமும் பார்த்துச் செல்ல வேண்டும். இரவில் வெளிச்சமான பகுதியில் கடந்து செல்ல வேண்டும்.
   சைக்கிள் ஓட்டுநர்கள் அதிகப் பாரம், நீளமான அல்லது மிக அகலமான பொருள்களை சைக்கிளில் எடுத்து செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட விதிகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
   விழாவையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் நடமாடும் பேருந்து புகைப்படக் கண்காட்சி பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் இயக்கப்பட்டது.
   எனவே, பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளைப் பின்பற்றி, விபத்து நடைபெறாத மாவட்டமாக அரியலூர் மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.
   நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் நாகராஜ், துணைக் கண்காணிப்பாளர் தொல்காப்பியன், அரியலூர் நகராட்சி ஆணையர் சரஸ்வதி, முதன்மைக் கல்வி அலுவலர் வைத்திலிங்கம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளர் அழகிரிசாமி, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ஜோதிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai