Enable Javscript for better performance
ரூ. 56.94 கோடியில் புதுவாழ்வுத் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் 134 ஊராட்சிகளில் ரூ. 56.94 கோடியில் புதுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    ஜயங்கொண்டம் ஒன்றியத்தில் 35, தா.பழூர் ஒன்றியத்தில் 33, திருமானூர் ஒன்றியத்தில் 36, செந்துறை ஒன்றியத்தில் 30 என மொத்தம் 134 ஊராட்சிகளில் ரூ. 56.94 கோடியில் புதுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஏழைகள், நலிவுற்றோர், மாற்றுத்திறனாளிகளின் வறுமையை ஒழிப்பதே திட்டத்தின் நோக்கம். கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு அளிக்கப்படும் நிதி மூலம், மக்களை கொண்டு அமைக்கப்பட்ட சுய உதவிக் குழுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குழுக்களுக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை ஆதார நிதி வழங்குதல் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    15 பார்வையற்ற அரசு, தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 6,500 வீதம் ரூ. 97,500 மதிப்பிலான குறுந்தகடு பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ஊராட்சி தொடக்க நிதியாக 134 ஊராட்சிகளுக்கு ரூ. 46.60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    151 வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு தொடக்க நிதியாக ரூ. 60.40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கும் தலா ரூ. 40 ஆயிரம் வீதம் இலக்கை அடைந்த 44 ஊராட்சிகளுக்கு ரூ. 17.60 லட்சமும், 80 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ. 1.60 கோடியில் தொடக்க நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், 5 திருநங்கைகளைக் கொண்டு சிகரம், மேண்மை ஆகிய 2 சிறப்புக் குழு அமைக்கப்பட்டு சமூக நலத்துறை சார்பில் தொழில் தொடங்க கடனுதவியாக தலா ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது. இவர்களுக்கு அரியலூர் இந்தியன் வங்கி கிளையில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, புத்தகப் பராமரிப்புப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதோடு, 5 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai