சுடச்சுட

  

   அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள கீழமாளிகை கிராமத்தில் நடைபெற்ற மக்களைத் தேடி மாவட்ட நிர்வாகம் சிறப்பு முகாமில், ரூ. 7 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்ரார் மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார்

  இங்கு சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:

  கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற இம்முகாமில் 1221 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது. இதில் 143 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மக்கள் கோரிய நடுநிலைப் பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை, நூலகக் கட்டடம், பகுதிநேர நியாய விலைக் கடை கட்டடம், காலனி தெரு மற்றும் வடக்குதெருவில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் கட்டப்படும்.

  மேலும், இந்திரா குடியிருப்புத் திட்டத்தில், 12 நபர்களுக்கு, பசுமை வீடு திட்டத்தில் 20 நபர்களுக்கு வீடு வழங்கப்படும். காலனி தெருவில் கழிப்பிடம் கேட்டுள்ளீர்கள். பொதுக் கழிப்பிடம் கட்டுவதைவிட, அங்கு உள்ள 429 வீடுகளுக்குத் தனித் தனியே கழிப்பறை கட்டுவதற்கு தலா ரூ 11,100 வீதம் வழங்கப்படும்.

  முகாமில் வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, விவசாயிகளுக்கு விசைத் தெளிப்பான் ஆகியனவை உள்ளிட்ட நலத் திட்டங்களின் மொத்த மதிப்பு ஏழு கோடியே ஒரு லட்சத்து இருபது ஆயிரம் ரூபாய் ஆகும். இதைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

  மாவட்ட வருவாய் அலுவலர் அ. கருப்பசாமி, சமூகநலத் துறை தனித் துணை ஆட்சியர் ஜீனத்பானு, மாவட்ட திட்ட இயக்குநர் முனியசாமி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வசந்தி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் உமாமகேஸ்வரி, ஜயங்கொண்டம் வட்டாட்சியர் சீனிவாசன் ஒன்றியக் குழுத் தலைவர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தேன்மொழி சாமிதுரை, ஒன்றியக் குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், ஊராட்சி மன்றத் தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  உடையார்பாளையம் கோட்டாட்சியர் கஸ்தூரி வரவேற்றார். வட்டாட்சியர் ராம்சந்தர் நன்றி கூறினார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai