சுடச்சுட

    

    டெல்டா விவசாயிகளின் அவல நிலைக்கு கர்நாடக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்

    By அரியலூர்  |   Published on : 26th January 2013 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டெல்டா பகுதி விவசாயிகளின் அவல நிலைக்கு கர்நாடக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். விவசாயிகளின் இன்னல்களை போக்குவதற்கான முதல் முயற்சியை அதிமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன்.

    அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

    தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் அதிமுக அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் பல மணி நேர மின் வெட்டு நிலவி வருவதற்கு அதிமுக அரசுதான் காரணம். மேலும், பல்வேறு பகுதிகளில் உள்ள சட்டம் - ஒழுங்கு பிரச்னையை மூடி மறைக்கும் வகையில், மத்திய அரசு மீது பழிபோடும் எண்ணத்தில், மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல. டெல்டா பகுதி விவசாயிகளின் அவல நிலைக்கு கர்நாடக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். விவசாயிகளின் இன்னல்களை போக்குவதற்கான முதல் முயற்சியை அதிமுக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    விவசாயிகள் பயிரிட்டுள்ள நிலத்தின் அளவிற்கேற்ப முழுமையான நிவாரணத்தை மாநில அரசு வழங்க வேண்டும்.

    தமிழக மீனவர் பிரச்னையில் தொடர்ந்து அக்கறை கொண்ட அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நிலைகளில், இலங்கை அரசுடன் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் அரசு இதழில் உறுதியாக வெளியிடப்படும். நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் அடுத்தாண்டு (2014) மே மாதத்தில் நடைபெறும். காங்கிரஸ் தலைமையிலான அரசு மீண்டும் வெற்றி பெறும் சூழல் உள்ளது.

    அதேபோல, மதச்சார்பற்ற கட்சிகள் தமிழகத்திலும், வெளி மாநிலத்திலும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையை ஏற்று வருவார்கள் என நம்புகிறேன் என்றார் ஜி.கே. வாசன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai