சுடச்சுட

  

  67 ஊராட்சிகளில் வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

  By  அரியலூர்  |   Published on : 29th January 2013 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில் 67 ஊராட்சிகளில் வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் ப.செந்தில்குமார்.
   அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் சார்பில் விழிப்புணர்வு வாகனத்தை திங்கள்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்த அவர் மேலும் கூறியது:
   வறுமையை ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், மாநில அரசின் பங்களிப்புடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012- 2013-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் அரியலூர் ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளிலும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 30 ஊராட்சிகளிலும் என 67 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழைகள், நலிவுற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் வறுமைகளை ஒழிப்பது, லாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகள் மற்றும் நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி தருவதன் மூலம் குடும்ப வருமானத்தை உயர்த்தி, வறுமையிலிருந்து விடுபட செய்வது திட்டத்தின் நோக்கமாகும்.
   மேலும் ஏழைகளுக்கு தேவையான திறன் பயிற்சி அளித்தல், கிராமங்களில் வறுமை ஒழிப்பு முயற்சிகள் மேற்கொள்ள தகுதியுள்ள நபர்களை அடையாளம் கண்டு பயன்படுத்துதல், இலக்கு மக்கள் குடும்பங்களை காப்பீட்டு சேவைகள் பெற செய்தல், தனியாக அல்லது கூட்டாக புதிய தொழில் முயற்சிகள் மேற்கொள்ள உதவிகள் வழங்குதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் பயிற்சிகள் அளித்தல், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் சமூக தணிக்கை போன்ற மக்கள் அமைப்புகளை கிராமங்களில் உருவாக்கி வலுப்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
   இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கற்றல் மையத்தின் கலைக்குழுவினர் தெருமுனை கூட்டம், துண்டு பிரசுரம் வழங்குதல், குறு நாடகம் மூலம் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் (ஜன. 28)67 ஊராட்சிகளில் பிப். 20ம் தேதி வரை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். எனவே, அரியலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் இயக்கம் குறித்து அறிந்துகொண்டு பயனடைய வேண்டும் என்றார் அவர்.
   இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் வசந்தி, உதவித்திட்ட அலுவலர் முருகண்ணன், அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரநாராயணன், எருத்ததுக்காரன்பட்டி ஊராட்சி தலைவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai