கரும்புக்கு அரசு அறிவித்த விலையை வழங்கக் கோரி திருமானூர் அருகே விவசாயிகள் தனியார் சர்க்கரை ஆலை முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே சாத்தமங்கலத்தில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த சர்க்கரை ஆலைக்கு திருமானூர் மற்றும் அரியலூர் பகுதிகளிலிருந்து விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிட்டு விநியோகித்து வருகின்றனர்.
இந்நிலையில் கரும்பு விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு கடந்த 2013-14 ஆம் ஆண்டுக்கு 1 டன் கரும்புக்கு ரூ. 2,550 விலை பரிந்துரை செய்தது. சர்க்கரை ஆலை நிர்வாகம் அரசு அறிவித்த விலையில் 1 டன்னுக்கு ரூ. 300 பிடித்தம் செய்து விவசாயிகளுக்கு ரூ. 2,250 மட்டும் வழங்கி வருவதாகவும், இதில் நடப்பு அரைவை பருவத்தில் ரூ. 12 கோடி விவசாயிகளுக்கு வழங்காமல் உள்ளது.
இந்தத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு காத்திருக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர்.
போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மணியன் முன்னிலை வகித்தார். இதில் கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என். செல்லத்துரை பேசும்போது, தமிழக அரசு அறிவித்த பரிந்துரை விலையை அரசு மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் வழங்கி வருகின்றன. ஆனால் இதுபோன்ற தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்காமல் ஏமாற்றி வருகிறது.
மேலும் விவசாயிகளின் பல கோடி ரூபாய் பணத்தை பிடித்தம் செய்து கொண்டு விவசாயிகளை கஷ்டத்தில் தள்ளியுள்ளது. எனவே விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ. 12 கோடியை ஆலை நிர்வாகம் கொடுக்கும் வரை இந்த காத்திருக்கும் போராட்டம் தொடரும் என்றார்.
போராட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.