Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டத்தில் தீவிர வாகனச் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 5 இடங்களில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் விதிமீறலில் ஈடுபட்ட 57 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    அரியலூர் அருகே அண்மையில் நேரிட்ட சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் சாலை விதிகள் மீறப்படுகிறதா எனத் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இரவு அரியலூர், வி.கைகாட்டி - தேளூர் சாலை, விளாங்குடி - செந்துறை சாலை, கீழப்பழூவூர் - அரியலூர் சாலை, ஓட்டக்கோவில் ஆகிய 5 இடங்களில் வாகனச் சோதனை நடத்தப்பட்டது. அரியலூர் - விளாங்குடி சாலையில் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது 2, குடிபோதையில் வாகனம் ஓட்டிய 5 வாகனம், சரியான ஆவணம் இல்லாமல் டிப்பர் லாரி 2, ஆம்னி வேன் 1, லாரி 1, இரண்டு சக்கர வாகனங்கள் 3, என 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் தேளூர் சாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் 2, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டி வந்ததாக 2, அதிக பாரம் ஏற்றிய லாரி 1, சீருடை இல்லாமல் வாகனம் ஓட்டி வந்ததாக 1, சிவப்பு விளக்கு எரியாமல் வந்த வாகனம் 2 என 8 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஓட்டக்கோவிலில் உரிமமின்றி வாகனம் ஓட்டியதாக 17, அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள் 4, உரிய ஆவணங்களின்றி வந்ததாக 4 வாகனங்கள், என 25 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    கீழப்பழூவூரில் அதிக பாரம் ஏற்றிவந்த 4 வாகனங்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த ஓட்டுநர்களின் வாகனம் 4, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 9 என மொத்தம் 17 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 23 வாகனங்களில் காற்று ஒலிப்பான் அகற்றப்பட்டது.

    அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 இடங்களில் வாகனச் சோதனை நடத்தப்பட்டு 57 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விதி மீறும் வாகனங்கள் மீதான நடவடிக்கை தொடரும் என்றார் ஆட்சியர்.

    ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஸ்தபா கமால் பாட்ஷா, உடையார்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் கருணாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மோகன், அரியலூர் வட்டாட்சியர் முருகன்,செந்துறை வட்டாட்சியர் முகுந்தன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணபவன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai