Enable Javscript for better performance
ராஜேந்திரசோழன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    ராஜேந்திரசோழன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழா

    By ஜயங்கொண்டம்  |   Published on : 19th June 2014 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில், ராஜேந்திரசோழன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழா ஜூலை 24, 25 தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது.

    ராஜேந்திரசோழன் கி.பி 1012 ஆம் ஆண்டில் ராஜராஜசோழனோடு ஆட்சி பொறுப்பேற்றார். பிறகு, 1014 ஆம் ஆண்டில் தந்தை இறந்த பிறகு அரியணை ஏறினார். ராஜேந்திரசோழன் ஆடி ஆதிரையில் பிறந்ததாக திருவாரூரில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ராஜேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு, இந்த ஆண்டில் வரும் ஆடி திருவாதிரை நாளான ஜூலை 25-ம் தேதி அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்கான ஆலோசனைக் கூட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர்கள் கங்கைகொண்டசோழபுரம் பாண்டியன், குருவாலப்பர்கோவில் குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக் கழகத் தலைவர் பொறியாளர் கோமகன் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசியது:

    ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு, அவரது பிறந்த நாளில் கங்கைகொண்டசோழபுரம் நகரின் பெருமையையும், ராஜேந்திர சோழனின் வரலாற்றையும் மக்களுக்கு நினைவூட்டும் வகையில் ஜூலை 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் பிறந்த நாளை கொண்டாடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையொட்டி, முதல் நாள் வரலாற்று கருத்தரங்கம் நடைபெறும். இதில் கங்கைகொண்டசோழபுரம் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை நூலாக்கி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திரசோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளான ஜூலை 25 அன்று காலை பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். மாலையில் ஆயிரம் ஆண்டை குறிக்கும் வகையில், ஆயிரம் மகாதீபம் ஏற்றப்படும். அதற்கு முதல் தீபம் தஞ்சாவூரில் இருந்து தொடர் ஓட்டமாகக் கொண்டுவரப்படும். மேலும், வளர்ப்பு அன்னை பஞ்சன்மாதேவிக்கு அவர் எழுப்பிய பள்ளிப்படையான பஞ்சவன்மாதேஸ்வரம் (பட்டீஸ்வரம்) மற்றும் திருவாரூர், தஞ்சை ஆகிய தொடர்புடைய முக்கிய கோவில்களில் அபிஷேகமும் நடைபெறும் என்றார். கூட்டத்தில் வரலாற்று ஆய்வறிஞர்கள் இல. தியாகராஜன், அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சிற்றரசு உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில், முன்னாள் ஊராட்சித் தலைவர் முல்லைநாதன், மாடர்ன் கல்வியியல் கல்லூரி முதல்வர் திருவள்ளுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai